Wednesday, December 26, 2012

6. சிரித்து வாழ வேண்டும்


1. "உங்க ஹோட்டல்ல பலகாரங்களோட லிஸ்டுக்குப் பக்கத்தில 'ஒரு லிட்டர், ரெண்டு லிட்டர்' என்றெல்லாம் எழுதி வைத்தததிருக்கிறீர்களே?"

"சாப்பிட்டு விட்டுக் காசு கொடுக்க முடியாதவர்கள் அரைக்க வேண்டிய மாவின் அளவு அது!"

2. "உங்க கம்பெனி கணக்குகளை சி ஏ ஜி ஆடிட் பண்ணப் போறாராமே , ஏதாவது தில்லு முல்லா?"

"ஆடிட் பண்ணப் போவது எங்கள் கம்பெனியின் சார்ட்டட் அக்கவுண்டண்ட்தான் . எங்கள் மானேஜர் அவரை மரியாதையாக சி ஏ ஜி என்றுதான் குறிப்பிடுவார். "

3. "உங்கள் ஆபீஸ் முதல் உதவிப் பெட்டியில் தூக்க மாத்திரை கூட இருக்கிறதே?"

"ஆபீசில் தூக்கம்  வராதவர்களுக்குத்தான் அது!"

4. "என் வகுப்பு ஆசிரியருக்கு எப்பவுமே என் மேல தனி மதிப்பு உண்டு."

"அப்படியா?"

"ஆமாம். மத்த பையன்களை எல்லாம் எருமைன்னு திட்டினா என்னை மட்டும் 'டெல்லி எருமை'ன்னுதான் திட்டுவார்!"

5. "என்ன, நீ கலெக்டர் ஆகா முடியாம போனதுக்கு, உங்க பள்ளி ஆசிரியைதான் காரணமா?"

"ஆமாம். அவர் மட்டும் என்னை அஞ்சாங் கிளாசில் பெயில் ஆக்காம இருந்திருந்தார்னா, நான் ஐ.எ.எஸ் படிச்சு கலெக்டர் ஆகியிருப்பேன்."

6. "இந்தக் காலனிக்கு ஏன் 'ஜோக் அடிச்சான் புரம்'னு பேரு?

"இங்க வீடு கட்டியிருக்கிரவங்க எல்லாம் பத்திரிகையில ஜோக் எழுதிச் சம்பாதிச்ச பணத்தில்தானே வீடு கட்டி இருக்காங்க!"

7. "நேரு மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தார்னா..?"

"என்ன ஆகியிருக்கும்?"

'அவருக்குத் தொண்ணுத்தஞ்சு வயசு ஆகியிருக்கும்!"

8. "நம்ம சுந்தரம் இன்னிக்கு ஒரு விபத்திலே மாட்டிக்கிட்டு தெய்வாதீனமா உயிர் பிழச்சுட்டான். பெரிய கண்டத்திலிருந்து தப்பிச்சிருக்கான்."

"அப்ப இன்னிக்கு அவனுக்கு சுந்தர கண்டம்னு சொல்லு!"

9. "நம்ப அண்ணன் ரொம்ப முன் யோசனை உள்ளவர்."

"எப்படிச் சொல்றே?"

"நம்ப தலைவர் உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதுமே, கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில பறக்க விட்டுட்டார்!"

10. சென்னைத் தொலைக்காட்சியின் எதிரொலி நிகழ்ச்சியில்:
"புதிய நாடகங்களை நாங்கள் ஒளி பரப்புவதில்லை  என்று ஒரு நேயர் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் பல பழைய நாடகங்களையே பலமுறை மறுஒளிபரப்பு செய்ய வேண்டியிருப்பதால், இப்போதைக்குப் புதிய நாடகங்களை ஒளிபரப்ப இயலாத நிலையில் இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

11. "முன்னாள் நடிகருக்கு நம் ஆஃபிசில் வேலைகொடுத்தது தப்பாகப் போய் விட்டது."

"ஏன்?"

"கொஞ்சம் கடினமான வேலையாக இருந்தால் 'டூப் வைத்துச் செய்து கொள்ளுங்கள்' என்கிறார்"

12. " 'சிறிதளவு 'வின்' பயன்படுத்தினால் போதும்' என்று நம் டிடர்ஜன்ட் சோப்புக்கு விளம்பரம் கொடுத்தது தப்பாகப் போய் விட்டது."

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"எல்லோரும் நம் 'வின்' சோப்பைச் சிறிதளவே பயன்படுத்த ஆரம்பித்து விட்டதால், நம் சோப் விற்பனை மிகவும் குறைந்து விட்டது!"

13. "நடிகரின் கணவர் கார் விபத்தில் காலமானார்' என்று செய்தி போட்டதற்காக ஆசிரியர் என்னைக் கோபித்துக் கொண்டார்."

"ஏன், செய்தி உண்மை இல்லையா?"

"எந்தக் கணவர் என்று போடவில்லையாம்!"

14. "என்னது? உன் காதலர் உன்னைக் கைவிட்டதற்குக் காரணம் சுண்டலா?"

"ஆமாம். தினமும் கடற்கரையில் எனக்குச் சுண்டல் வாங்கிக் கொடுத்த கடனைத் தீர்க்க முடியாமல், சுண்டல் விற்பவரின் மகளையே கல்யாணம் செய்துகொண்டு விட்டார்!"

15. "இந்தக் காலத்தில் திறமைக்கு மதிப்பே இல்லை. என் திறமையைக் காட்டியதற்குப் பரிசு சிறைத் தண்டனைதான்!"
       -  அலுத்துக் கொண்டவர் ஒரு ஃபோர்ஜரிக்காரர்.

16. "என்னய்யா இது? உங்கள் சர்வர் போன வருஷம் போட்ட மைசூர் பாக்கைக் கொடுத்திருக்கிறாரே!"

"இருக்காதே! இரண்டு வருஷம் முன்பு போட்ட மைசூர் பாக் தீராதவரை, போன வருஷ் ஸ்டாக்கை எடுக்கக் கூடாது என்று அவரிடம் ஸ்ட்ரிக்டாகச் சொல்லியிருக்கிறேனே!"

17. அரசர்: அமைச்சரே! ஏன் கல்யாண விருந்து முடிந்ததும் எச்சில் இலையை எடுக்க எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள்?

அமைச்சர்: இளவரசரின் திருமண விருந்தில் வாழை இலைக்குப் பதிலாக வெள்ளித் தகடுகளை அல்லவா போட்டிருக்கிறார் உங்கள் சம்பந்தி மன்னர்!

18. அரசர்: அமைச்சரே! நம் ஆட்சியில் மாதம் மும்மாரி பொழிவது பற்றி இப்போதெல்லாம் புலவர்கள் யாரும் பாராட்டிப் பாடுவதில்லையே, ஏன்?

அமைச்சர்: நாம் சில்வர் அயோடைடைத் தூவி செயற்கை மழை பொழிய வைத்த விவரம் அவர்களுக்குத் தெரிந்து விட்டது போலும்!

19. "நீங்க இப்ப அமைச்சரா இருக்கீங்கங்கறதுக்காக நீங்க செய்யப்போற ஊழலுக்கெல்லாம் இப்பவே முன் ஜாமீன் வாங்க சட்டத்த்தில் இடமில்லை."

20. "என் கட்சிக்காரர் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாததால், அவரைக் கட்டிலோடு சேர்த்து கிரேனில் தூக்கி நீதிமன்ற வாசலுக்குக் கொண்டு வந்திருக்கிறோம், யுவர் ஆனர்."

21. "ஹோட்டல் சரக்கு மாஸ்டரைக் கல்யாண சமையலுக்குப் போட்டது தப்பாப் போச்சு.'

"ஏன்?"

"முந்தின கல்யாணங்களில் செஞ்ச அயிட்டங்கள் மீதி இருந்தா கொடுங்க, புதுச் சரக்கா மாத்திடறேங்கறாரு."

22. "நம்ப தலைவர் படு கில்லாடி. நேத்து அவருக்குப் பொறந்த குழந்தைக்குக் கூட முன் ஜாமினுக்கு அப்ளை பண்ணிட்டாரு!"

23. "சமீப காலமா நம்ம ஊர்ல செருப்பு விற்பனை அதிகமாயிருக்கிறதைப் பத்தி தலைவர் ரொம்பக் கவலையா இருக்காரு."

"ஏன்?'

"தேர்தல் பிரசாரத்தின்போது, 'நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் என்னைச் செருப்பால் அடியுங்கள்' என்று பேசியதை நினைத்துத்தான்!"

24. "நம்ம தலைவர் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியதில் நிறைய முறைகேடுகள் நடந்திருக்கிறதாம்."

"என்ன முறைகேடுகள்?"

"அவரைச் சந்தித்துப் பேசிய பல 'கட்சி உறுப்பினர்கள்' போலி உறுப்பினர்களாம்!

25. "கட்டிட நிதிக்காக நம்ப தலைவர் திரட்டின நிதி என்ன ஆச்சு?"

"நாமதான் ஆட்சிக்கு வரப் போறோம்னு மனக்கோட்டை கட்டினதுக்கே எல்லாப் பணமும் சரியாப் போயிடுச்சாம்."

26. "நம்ம தலைவர் ஆனாலும் ரொம்ப விஷயம் தெரியாதவரா இருக்காரு."

"ஏன் அப்படிச் சொல்றே?"

"திட்டக் கமிஷனுக்கு அரசாங்கம் உறுப்பினர்களை நியமிச்ச செய்தியைக் கேட்டு விட்டு, 'என்னைத் திட்டறதுக்காகக் கமிஷன் போட்டிருப்பது அநியாயம்' என்று அறிக்கை விட்டிருக்காரு!"

27. "பதவியில் இல்லாவிட்டாலும் மக்களுக்குச் சேவை செய்வதை நிறுத்த மாட்டோம்னு சொன்னதைத் தலைவர் செயலிலே காண்பிச்சுட்டாரு."

"என்ன செஞ்சாரு?"

"புதுசா ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சிருக்காராம்!"

28. "ரௌடி ராக்கப்பன் செயின் திருட்டு பற்றிப் புகார் கொடுக்க வந்திருக்கான்."

"அவன் பொண்டாட்டி செயினை யாராவது அறுத்துக்கிட்டுப் போயிட்டாங்களா?"

"இல்லை. சைக்கிள் செயினோட அவன் ரோட்டில நடந்து வந்துகிட்டு இருக்கச்சே, யாரோ மோட்டர் சைக்கிளில் வந்து அவன் கையிலிருந்த செயினைப் பிடுங்கிக்கிட்டுப் போயிட்டாங்களாம்!"

29. "செயின் திருட்டை விசாரிக்கப் போன 427 என்ன ஆனாரு?"

"அவர் சைக்கிளை நிறுத்தி விட்டுப் போனபோது யாரோ அவர் சைக்கிள் செயினைக் கழட்டிக்கிட்டுப் போயிட்டாங்களாம்!"

30. "தலைவரே, வழக்கில நாம தோத்துட்டோம்."

"கள்ள ஒட்டுத்தான் தோல்விக்குக் காரணம்னு அறிக்கை விட்டுடுங்க!"

31. "ஒரு தபால்காரர் கதை எழுதினால் எழுதி முடித்த பின் என்ன செய்வார்?"

"பின் கோடு போடுவார்."

32. "வீடு பூரா பத்தி எரியுது. என்ன செஞ்சுக்கிட்டிருக்கீங்க?"

"பத்தி எரியற  வாசனையை அனுபவிச்சுக்கிட்டிருக்கேன்."

33. என்னதான் பெரிய பணக்காரர் என்றாலும் தாடியைக் கூட ஆபரேஷன் பண்ணித்தான் எடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் இன்னொரு மனிதரை நான் பார்த்ததில்லை!

34. சார்! இந்தக் கட்டிடத்துக்கு உங்களை அடிக்கல் நாட்டச் சொன்னது உண்மைதான். அதற்காக ஒவ்வொரு கல்லையும் மிதித்துத் தரையில் நாட்ட வேண்டும் என்று அவசியமில்லை!

35. "ஒண்ணுமில்லை, தலைக்கு ஹேர் டை போட்டுக்கல. தன் முகத்தைக் கண்ணாடியில பாத்துட்டு மயங்கி விழுந்துட்டா!"

36. "மேலே இருப்பவர் எங்கள் சர்க்கஸ் முதலாளிதான். எங்கள் சம்பள பாக்கியை உடனே கொடுப்பதாக ஒப்புக் கொண்டால்தான் கீழே இறக்குவோம்."

தீபாவளி!

1) "ஏம்ப்பா, என்  வீட்டுக்காரருக்குக் குழழந்தை மனசுன்னு எவ்வளவு தடவை சுல்லி இருக்கேன்? அப்படி இருந்தும் இப்படிப் பண்ணிட்டீங்களே!"

"ஏம்மா, என்னாச்சு?"

":தீபாவளிப் பட்டாசு எல்லாம் ஒரே வெடிகளா இருக்காம். ஒரு கம்பி மத்தாப்புக் கூட இல்லேன்னு கோவிச்சுட்டுப் போயிட்டாரு!"

2)  "என்ன வெடிச்சத்தம் கேக்குதே, அதுக்குள்ளேயாவா பொழுது விடிஞ்சுடுச்சு"
  
      "அது வெடிச்சத்தம் இல்ல. உங்கப்பா பொடி போட்டுட்டுத் தும்மறாரு. பேசாம தூங்கு."

  3)    ":தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வர மாட்டேன்னுட்டாரு. என் பெண்ணை மட்டும் அழைச்சுக்கிட்டு வந்து அவளுக்குத் தலை தீபாவளி கொண்டாடிட்டேன்."

"அப்ப அது ஒருதலை தீபாவளின்னு சொல்லுங்க!"

4)  "உலகத்திலேயே அதிகமான தலை தீபாவளிகள் கொண்டாடினவரு யாரு தெரியுமா?"

"யாரு?"

"தசரத மகாராஜாதான். அவர் 60,000 தலை தீபாவளிகள் கொண்டாடி இருப்பாரே!"

5)  "என்ன டெய்லர், ஏன் சோகமா இருக்கீங்க?"

"தீபாவளி  டிரஸ்கள் தைக்கறதில பிசியா இருந்ததிலர என் மாப்பிள்ளையீட தீபவளி டிரஸ்ஸைத் தைக்காம போயிட்டேன். தலை தீபாவளிக்காக வந்த அவரு கோவிச்சுக்கிட்டு ஊருக்குப் போயிட்டாரு."

6) "இந்த வருஷம் தலை தீபாவளி ஜோக்ஸை யார் அனுப்பினாலும் பிரசுரிக்க வேண்டாம்னு ஆசிரியர் கண்டிப்பா சொல்லிட்டாரு."

"ஏன்?"

"போன வருஷம் அவருக்கு தலை தீபாவளியாச்சே! அந்த அனுபவத்தில எல்லா ஜோக்ஸையும் அவரே எழுதப் போறாராம்!"

7) அப்பா: என்ன மாப்பிள்ளை, தீபாவளி பட்சணமெல்லாம் எப்படி இருந்தது?"

    மகள்: பிரமாதம்ப்பா! என்ன இருந்தாலும் உங்க கைப்பக்குவம் இவருக்கு வரதில்ல!"

8) "வாங்க மாப்பிள்ளை! என்ன தலை தீபாவளிக்கு நீங்க மட்டும் வந்திருக்கீங்க? மீன வரலியா?"

"உங்க பெண்ணுக்கு லீவு கிடைக்கல. அதனால என்னை மட்டும் அனுப்பி வச்சிருக்கா!"

9) "தலை தீபாவளிக்கு 'நரகாசுரபவன்'லதான் ஸ்வீட் வாங்குவீங்களா, ஏன்?"

"என் முதல் மாப்பிள்ளையோட தலைதீபாவளிசமயத்தில தயாரிச்ச அதே ஸ்வீட்களை என் அஞ்சாவது மாப்பிள்ளையோட தலை தீபவளிக்கும் சப்ளை பண்றாங்களே, அந்த ராசிக்காகத்தான்!"

10) "உன் மாமனார் ஏன் ரொம்பக் கோவமா இருக்காரு?"

       "அவரோட அறுபதாம் கல்யாணத்துக்கு அப்புறம் வந்த தலை தீபாவளிக்கு அவர் மாப்பிள்ளைகள் யாரும் சரியா சீர் செய்யலியாம்!"

11) "எங்கப்பா தீபாவளிக்கு சிவகாசிக்குப் போய் பட்டாசுத் தொழிற்சாலைகளிலிருந்தே பட்டாசு வாங்கிக்கிட்டு வருவாரு.

"இது என்ன பிரமாதம்? எங்கப்பா போன வருஷம் சேகரிச்ச வெடிக்காத பட்டாசுகளிலிருந்து வெடிமருந்தை எடுத்துத் திரியெல்லாம் வச்சுப் புதுப் பட்டாசுகளையே உருவாக்கிடுவாரு.

12) "என்ன மாப்பிள்ளை, தீபாவளிக்கு எடுத்த பட்டு புடவை எப்படி இருக்கு?"

"இங்கே பாருங்க மாமா, தீபாவளிக்கு நீங்க உங்க பெண்ணுக்கு பட்டுப் புடவை வாங்கிக் கொடுக்காட்டா பரவாயில்ல.. உங்க பெண் பட்டுவுக்கு ஒரு சாதாரணப் படவை வாங்கிக் கொடுத்துட்டு பட்டு புடவை நல்லா இருக்கான்னு கேக்கறது நல்லாயில்ல."

13) ஹோட்டல் சரக்கு மாஸ்டர் (பத்திரிகை ஆசிரியரிடம்): உங்க பாடு பரவாயில்ல சார்! தீபாவளி ஜோக்ஸ்னு சொல்லிப் போன வருஷ ஸ்டாக்ல மீதி இருக்கிறதையெல்லாம் இந்த வருஷம் போட்டுடுவீங்க. நான் பாருங்க, ஒவ்வொரு வருஷமும் புதுசா ஸ்வீட் போட வேண்டி இருக்கு!"

14)  "ராக்கெட், ஏரோப்ளேன் எல்லாம் தெரியும், அது என்ன விலைவாசி வெடி?"

        "புதுசா வந்திருக்கு. ராக்கெட்டை விட மேலே போகும். ஆனா கீழே வராது!"

15)  அப்பாவுக்கு,

தீபாவளிக்கு முதல் நாள் நான் அங்கே வருகிறேன்.உங்கள் மாப்பிள்ளையை நான்கு நாட்கள் முன்பே அனுப்பி வைக்கிறேன்.தீபாவளிபட்சணங்கள் செய்ய உங்களுக்கு உதவியாக இருப்பார்."


Thursday, October 25, 2012

5. பந்த் - சில குறிப்புகள்


'பந்த்'  என்ற 'தூய' தமிழ்ச் சொல்லைப் பற்றித் தமிழ் நாட்டு அரசியலுக்குப் பழக்கப் படாதவர்கள் மற்றும் எதிர்காலத் தமிழ்ச் சந்ததியினர் புரிந்து கொள்ள உதவும் வகையில் இந்தக்  குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பந்த் என்றால் கதவடைப்பு அல்லது வேலை நிறுத்தம் என்று பொருள். இந்தியை எதிர்த்த (எதிர்க்கும்)  அரசியல் தலைவர்களும் முழுமனதோடும், ஒருமனதோடும் தமிழ்ச் சொல்லாக ஏற்றுக்கொண்ட இந்தி வார்த்தை இது.

'பந்து'க்கு யார் வேண்டுமானாலும் அழைப்பு விடலாம். அழைப்பு விடும் நபருக்கு அல்லது அவரது அமைப்புக்கு ஓரளவு ஆள் பலமும், கத்தி, கம்பு, அமில பாட்டில், கற்கள் போன்ற சில 'அமைதிப் படை ஆயுதங்களும்' இருக்க வேண்டியது அவசியம்.

சில சமயம், மாநில அரசும் 'பந்து'க்கு அழைப்பு விடும். அப்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை உண்டு. அரசு பஸ்கள் ஓடாது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. அரசு ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொண்டாட்டம். மற்றவர்களுக்கெல்லாம் திண்டாட்டம்!

வருடத்துக்கு இரண்டு 'பந்த்'களாவது நடத்துவது அரசியல் கட்சிகளுக்கு ஒரு உற்சாக டானிக்.

விடுமுறையை ஒட்டி 'பந்த்' வந்தால் மக்களுக்குத் திண்டாட்டம் அதிகம் என்பதால், மக்களிடம் 'அக்கறை' கொண்ட கட்சிகள் பெரும்பாலும் விடுமுறை நாளை ஒட்டியே 'பந்த்' நடத்த விழைவார்கள்.

'பந்த்' எந்தக் காரணத்துக்காகவும் நடத்தப்படலாம். ஊழல் முதல்வர் பதவி விலக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஆதரித்து அல்லது எதிர்த்து, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பெயர் தெரியாத ஒரு நாட்டில் ஒரு தமிழன்  ஏதோ ஒரு காரணத்துக்காகக் கொல்லப்பட்டதைக் கண்டித்து..இதுபோல் எத்தனையோ காரணங்களுக்காக.

எந்த நோக்கத்துக்காக 'பந்த்' நடத்தப்பட்டாலும், 'பந்த்' முடிந்தவுடன் அந்த நோக்கத்தைப் பற்றி யாரும் பேசுவதில்லை. உதாரணம்: இலங்கைத் தமிழர் பிரச்னை, காவிரி நீர் பிரச்னை, இட ஒதுக்கீடு முதலியன.

'பந்த்' என்றால் முழு 'பந்த்' இல்லை. சில தொழில்/வியாபார அமைப்புகளுக்கு விலக்கு உண்டு - காரணமாகத்தான்!
மின் வாரியத்துக்கு விலக்கு உண்டு - வேலைக்குப் போகாமல் வீட்டில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு மின் விசிறிக்காற்றும், தலைவர்களுக்கு ஏசியும் அவசியம் என்பதால்.
பால் விற்பனை நிறுவனத்துக்கு விலக்கு உண்டு - காப்பி சாப்பிடாமல் எப்படி இருக்க முடியும்?
கேபிள் டிவி நடதுபவர்களுக்கும் விலக்கு உண்டு - வேலைக்குப் போகாமல் வீட்டில் உட்கார்ந்திருபவர்களுக்குப் பொழுது போக்கு அவசியம் ஆயிற்றே?
ஆஸ்பத்திரிகளுக்கும் விலக்கு உண்டு - 'பந்தி'ன் போது நடக்கும்  வன்முறையில் அடிபட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக!

'பந்தி'னால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தினக்கூலிகள், காய்கறி வியாபரிகள், பயணம் மேற்கொள்வோர் முதலியோர். பயன் பெறுபவ்ர்களும் உண்டு. ரொட்டி, பிஸ்கட் விற்பவர்களுக்கு 'பந்து'க்கு முதல் நாள் நல்ல வியாபாரம் நடக்கும்.

* 'பந்த்' நடந்து முடிந்த பிறகு, அது வெற்றியா, தோல்வியா என்பது பற்றிப் பல்வேறு கட்சி சார்புள்ள ஊடகங்களின் துணையுடன், மக்கள் பட்டி மண்டபம் நடத்துவார்கள். இதனால் மக்களின் சிந்தனைத் திறனும், பகுத்து ஆயும் திறமையும், பேச்சாற்றலும் வளர்கின்றன.

*மத்திய அரசுக்கு எதிராக 'பந்த்' அறிவிக்கப்பட்டால், 'பந்து'க்கு ஒரு வாரம் முன்பிலிருந்தே 'பந்தி'னால் ஏற்படும் பொருளாதார இழப்பைப் பற்றியும், பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடங்களைப் பற்றியும் அரசின் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் உபதேசங்கள் செய்யப்படும். பத்திரிகைகளிலும் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படும் -'பந்தி'னால் ஏற்படக்கூடிய இழப்பை விட இந்த விளம்பரங்களுக்கு ஆகும் செலவு அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே என்று நினைக்க வைக்கும் அளவுக்கு!

'பந்த்' நடந்து முடிந்ததும், 'பந்த்' படுதோல்வி அடைந்தது, 'பந்தி'னால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை, பஸ்கள் ஓடின, கடைகள் திறந்திருந்தன என்றெல்லாம் அறிவிக்கப்பட்டு இதற்கு ஆதாரமாக வீடியோக்கள் காட்டப்படும். இந்த வீடியோக்கள் என்றைக்கு எடுக்கப்பட்டவை என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

'பந்த்' மாநில அரசுக்கு எதிராக இருந்து, மத்தியில் ஆளும் கட்சியின் ஆதரவும் பெற்றிருந்தால், பொருளாதார இழப்புகள் பற்றி டிவியும் ரேடியோவும் பேச மட்டா. 'பந்து'க்கு நல்ல ஆதரவு இருந்தது என்று செய்தி வெளியிடப்பட்டு வீடியோ ஆதாரங்கள் காட்டப்படும்!

'பந்து'க்கு முன் தினமே எதிர்க்கட்சி 'குண்டர்கள்' கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுவர். 'பந்த்' அன்று ஆளும் கட்சித் 'தொண்டர்கள்' ஆயுதங்களுடன் 'அமைதியாக' நடமாடி 'பந்தை' முறியடிக்க அனுமதிக்கப்படுவர்.

'பந்தை' முறியடிக்கச் சுலபமான வழிகள் இரண்டு உண்டு.  ஒன்று, எதிர்க்கட்சிகள் 'பந்த்' அறிவித்தால், ஆளும் கட்சி அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் அந்த அறிவிப்பை முழுமையாக அலட்சியம் செய்து,  தான் பாட்டுக்கு இயங்குவது. 'பந்த்' பிசுபிசுத்துப் போகும்படி செய்ய இது ஒரு எளிய வழி. இரண்டாவது, எதிர்க்கட்சிகள் எந்தக் காரணத்துக்காக 'பந்த்' நடத்துகிறார்களோ, அதற்கு எதிரான காரணத்துக்காக ஆளும் கட்சியும் அதே நாளில் 'பந்த்' நடத்துவது. உதாரணமாக, ஒரு மாநில முதல்வர் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அனுமதி கொடுத்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதனால் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் 'பந்த்' நடத்தினால், முதல்வர் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அனுமதி கொடுத்ததை எதிர்த்து ஆளும் கட்சி அதே நாளில் 'பந்த்' நடத்தலாம். 'பந்த்' முழு வெற்றி அடையும். நாங்கள் நடத்திய 'பந்த்' முழு வெற்றி அடைந்ததாக இரண்டு தரப்புமே சொல்லிக் கொள்லலாம். ஆனாலும் இது உண்மையான வெற்றி அல்ல என்று அவர்களுக்குத் தெரியுமாதலால், 'பந்த்' நடத்திய திருப்தி அவர்களுக்கு இருக்காது. எனவே எதிர்காலத்தில் இன்னொரு 'பந்த்' அறிவிக்க அவர்கள் யோசனை செய்வார்கள்.

இந்த இரண்டு வழிகளில் ஒன்றைக்கூட இதுவரை யாரும் முயற்சி செய்து பார்த்ததாகத் தெரியவில்லை!

Tuesday, October 16, 2012

4. மூக்குடைப்பு யாருக்கு? (ஒரு கற்பனை)

இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள்: குண்டுமணி (சுருக்கமாக மணி), முருகன், சூர்ய சந்திரன்  (சுருக்கமாக எஸ் சந்திரன் அல்லது எஸ் எஸ்) மற்றும் தங்கவேலு (சுருக்கமாக வேலு)

மணி: போர் அடிக்குதப்பா. என்ன செய்யறதுன்னே தெரியலே!

முருக: ஏண்ணே, ஒங்களை அடிக்குதே அந்த 'போரை' என்னால பாக்க முடியுமா?

மணி: கண்ணுக்கு முன்னால பெரிசாத் தெரியற வெக்கப்போரையே ஒன்னால பாக்க முடியாது. வெறும் 'போரை' நீ எங்கடா பாக்கறது, விளாம்பழத்தலையா? ஏண்டா இப்படி ஒளறிக்கொட்டறே?

முரு: அதில்லேண்ணே. நீங்கதான் எப்பவும் என்னப் போட்டு அடிக்கறீங்க. ஒங்களையே ஒரு 'போர்' அடிக்குதுன்னா அந்த'போரைப்' பாக்கலாமேன்னுதான்.

மணி: போரிங் பைப்பாலயே ஒம் மண்டையைப் பொளக்கணும்டா பேரிக்காத் தலையா! கிண்டலா பண்றே? பொழுது போறதுக்கு உருப்படியான யோசனை ஏதாவது சொல்லித் தொலைடா!

முரு: உருப்படியான யோசனை வேணும்னு கரெக்டா என்னைக் கேட்டிருக்கீங்களே! ஒங்களுக்கு அதெல்லாம் தோணாதுன்னுதானே?

மணி: டேய்!

முரு: கோவிச்சுக்காதீங்கண்ணே! ஒரு அருமையான வெளையாட்டு வெச்சிருக்கேன். 'அரசியல் அரங்கம்' வெளையாட்டு வெளையாடலாமா?

மணி:  அரட்டை அரங்கம்னு கேள்விப்பட்டிருக்கேன். அதென்னடா 'அரசியல் அரங்கம்?' ஒன்ன மாதிரி கொரங்குப் பசங்க வெளையாடறதா?

முரு: இல்லீங்கண்ணே. இந்த எம்.ஏ. படிச்சவங்கள்ளாம் வெளையாடுவாங்களே!

மணி: எம்.ஏ.வா?..ஓ! எம்.எல்.ஏ.ன்னு சொல்ல வந்தியா?

முரு: அதத்தாண்ணே நானும் சொன்னேன்! எம் ஏ!

மணி: எதத்தாண்டா நீயும் சொன்னே, ரப்பர் நாக்கு வாயா? எம்.ஏ.வுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் வித்தியாசம் இல்லையா?

முரு: என்னண்ணே வித்தியாசம்?

மணி: ஒண்ணுலே எல் இருக்கு, இன்னொண்ணில இல்லே! மூஞ்சியைப் பாரு, மொதலைக்குட்டி மாதிரி. அது சரி, அது என்னடா விளையாட்டு?

முரு: அரட்டை அரங்கத்தில -அதாங்க அரசியல் அரங்கம் - அதுல எல்லா எம்.ஏ.க்களும் இருப்பாங்க.

மணி: டேய், எம்.ஏ. இல்லை எம்.எல்.ஏ.ன்னு இப்பத்தானே சொன்னேன்!

முரு: இவங்க எம்.எல்.ஏ. இல்லேங்க, வேறே ஆளுங்க. எம்.ஏ.ன்னா, மக்களை ஏமாத்தறவங்கன்னு அர்த்தம்.

மணி: அப்படியா? நல்லா இருக்கே! மேலே சொல்லு.

முரு: அரங்கத்தில பல அணிகள் இருக்கும். ஒவ்வொரு அணியிலேயும் எம்.ஏக்கள் இருப்பாங்க. ஒரு நடுவர் இருப்பாரு. எம்.ஏக்கள் அடிச்சுக்கறதும், நடுவர் அவங்களைத் தடுக்கறதும், சில பேருக்கு தண்டனை கொடுக்கறதுன்னும் ரொம்ப இன்டரஸ்டா இருக்கும்ணே!

மணி: இந்த வெளயாட்டுக்கு நாம ரெண்டு பேர் மட்டும் எப்படிப் போதும்? நான் ஒன்னை அடிக்கும்போது, அதைப் பாக்கறதுக்கு ஒரு ஆளாவது இருக்க வேண்டாமா?

முரு: அதுக்குத்தான் நம்ம வேலுவையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்.

மணி: அட்ரா சக்கை. எங்க அந்தக் கொள்ளிவாய்ப் பிசாசு?

முரு: இதோ எனக்குப் பின்னாலேதான்  நிக்கறாரு. வேலு, வாய்யா முன்னாடி!

வேலு: கும்பிடறேன்யா!

மணி: கும்பிடறேன்னு வாயால சொன்னாப் போதுமா? கை கூப்பிக் கும்பிட்டா என்ன கொறைஞ்சா போயிடுவே?

வேலு: இப்பத்தான் போஸ்டர் ஒட்டிட்டு வந்தேன். அதனால ரெண்டு கையிலேயும் பசை. கும்பிட்டா ரெண்டு கையும் ஒட்டிக்குமோன்னு பயமா இருந்திச்சு. பாருங்க!

(மணியின் சட்டையில் தன் இரு உள்ளங்கைகளையும் வைக்க, கைகள் சட்டையில் ஒட்டிக்கொள்கின்றன.)

மணி: டேய் கையை எடுடா, கபோதி. நல்ல சட்டையை நாசம் பண்ணிட்டியேடா!... கையை மெதுவா இழுடா -  சட்டை பிஞ்சுடப் போவுது.

வேலு: இப்பத்தான் சட்டை நல்லா டிசைனா பாக்கற மாதிரி இருக்கு!

மணி: இரு இரு. ஒன் சட்டையில டிசைன் போட்டு விடறேன் ஒட்டடைத் தலையா! ஓ, நீதான் சட்டையே போட மாட்டியே!.  அது சரிடா முருகா, நாம மூணு பேரு இருக்கோம். நடுவர் வேஷம் போட ஒரு ஆளு வேணுமே!

முரு: வேஷம் போடறதா? நாம என்ன நாடகமா நடத்தப் போறோம்? வெளையாடத்தானே போறோம்?

மணி: ஏதோ ஒண்ணு. நடுவர் யாரு? அதைச் சொல்லு!

முரு: நீங்கதானே பெரியவரு, நீங்கதாண்ணே நடுவரா இருக்கணும்.

மணி: அது எனக்குத் தெரியும்டா நாயே. நடுவரா இருந்தா ஒன்னைப் போட்டு மிதிக்க முடியாதேன்னு பாக்கறேன்!

முரு: அப்படின்னா நம்ம சந்திரன் அண்ணனை  நடுவரா வச்சுக்கலாம். அதோ அவரே வந்துட்டாரே!

மணி:  (முணுமுணுப் புடன்) வந்துட்டான்யா கழுகு!..  (சிரித்துக்கொண்டே) வாங்க நடுவரே!

முரு: ஒக்காருங்க நடுவரே!

எஸ் எஸ்: கவுத்துட மாட்டிங்களே! சரி பட்டிமண்டபத்தை ஆரம்பிக்கலாமா?

மணி: ஏண்டா நடுவர்னா, பட்டிமண்டபம்தான் நடத்துணுமா?

எஸ் எஸ்: இல்லே பாட்டி மண்டபம் கூட நடத்தலாம், ஏம்ப்பா முருகா, பாட்டிங்க யாராவது வந்திருக்காங்களா?

மணி: டேய் இது மாதிரி இடக்காப் பேசிக்கிட்டிருந்தே, நடுவர்னு கூடப் பாக்க மாட்டேன்.

எஸ் எஸ்: சரி எதுவா இருந்தா என்ன? மொதல்லே எல்லாரும் எழுந்து ஜனகணமண பாடுங்க.

முரு: அதைக் கடைசீலதாங்க பாடணும்!

எஸ் எஸ்: ஓ இப்ப அப்படி மாத்திட்டாங்களா? எனக்குத் தெரியாம போச்சே! சரி, இன்னிக்கு அரங்கத்திலே என்ன பிரச்னை?

மணி: (தனக்குள்)ஆரம்பத்திலேயே பிரச்னையா? சரியான கரிநாக்குவாயனா இருப்பான் போலே இருக்கே!

எஸ் எஸ்: என்ன அங்கே முணுமுணுப்பு?

மணி: அதில்லீங்க நடுவரே. ரெண்டு நாயிலெ மொதல்லே எந்த நாயை அடிக்கறதுன்னு யோசனை பண்ணிக்கிட்டிருக்கேன்!

வேலு: எங்களைப் பாத்தா நாய்ங்கறீங்க? அப்ப நீங்க என்ன ஓநாயா?

முரு: நடுவர் அவர்களே இவர் எங்களைப் பாத்து நாய்ன்னு சொன்னதுக்கு இவர் மேலே உரிமைப் பிரச்னை கொண்டு வரப் போறேன்!

எஸ் எஸ்: உருளைக்கிழங்கு பஜ்ஜி கொண்டு வந்தாலாவது வாய்க்கு ருசியா சாப்பிடலாம்.  உரிமைப் பிரச்னை கொண்டு வந்து என்ன பிரயோசனம்?

முரு: அதில்லேங்க, அவரு எங்களை நாய்னு திட்டலாமா?

வேலு: அதானே, வேறே ஏதாவது சொல்லித் திட்டியிருக்கலாம்லே?

எஸ் எஸ்: அதுவும் சரிதான்.  இங்க பாருங்க மிஸ்டர் மணி, நீங்க இவங்களை நாய்னு  திட்டியிருக்கக் கூடாது. இது தெரிஞ்சா நாய்களுக்கு எவ்வளவு அவமானமா இருக்கும்?

மணி: ஓகோ! இந்த நாய்ங்க்ளை நாயின்னு திட்டக் கூடாதோ? அப்போ கழுதைன்னு திட்டிட்டுப் போறேன்!

முரு:  என்னண்ணே இது ஒங்க பேரைச் சொல்லி எங்களைக் கூப்பிடறீங்க?

மணி: டேய் மண்டையைப் பொளந்துடுவேண்டா மாட்டுக்கொம்புத் தலையா!

எஸ் எஸ்: அவருதான் ஒங்களை அண்ணேன்னு கூப்பிடறாரே, அப்ப ரெண்டு பேரும் ஒரே இனம்தானே?

வேலு:  அப்படிப் போடுங்க நடுவரே! இங்கே நான் ஒருத்தன் தான் மனுஷன் ஆஹ்ஹாங்!

எஸ் எஸ்: அப்ப நான் யாருய்யா?

வேலு:  நீங்கதான் நடுவராச்சே? இதுவும் இல்லாம அதுவும் இல்லாமதானே இருக்கணும்!

எஸ் எஸ்: இப்ப நான் எதுவா இருக்கேன்னு எனக்கே சந்தேகமா இருக்கு! சரி, அடுத்த அயிட்டத்துக்குப் போவோம்.

மணி: ஆமாம். இங்கே பந்தி நடக்குது. மொதல் அயிட்டமா ஜாங்கிரி போட்டாங்க. இப்ப அடுத்த அயிட்டத்துக்குத் தயாரா நிக்காறாரு நடுவரு! நல்ல நடுவர் வந்து வாய்ச்சாருப்பா!

எஸ் எஸ்: என்ன அங்கே முணுமுணுப்பு?

மணி: கந்தசஷ்டி கவசம் சொன்னேனுங்கோ!

முரு: நடுவர் அவர்களே, நான் எழுப்பிய உரிமைப் பிரச்னை என்ன ஆச்சு?

எஸ் எஸ்: போயே போச்சு, போயிந்தே, இட் இஸ் கான். (யோசித்தபடி) இதே மாதிரி வேறே யாரோ சொல்லுவாங்களே!

மணி: நாயே என்னடா கேட்டே? உரிமைப் பிரச்னைதானே? நானே இதைத் தீர்த்து வைக்கிறேன் பாரு!

(முருகனின் முகத்தில் மணி ஓங்கிக் குத்த, மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறது. வேலு அவரைத் தாங்கிப் பிடிக்கிறார்.)

வேலு: அடப்பாவி! எடுப்பா இருந்த மூக்கை இப்படி ஒடைச்சுட்டானே!

மணி: ஆமாம் பெரிய கிளியோபாட்ரோ மூக்கு பாரு. வாயால மூச்சு விடற பன்னிக்கு எதுக்குடா மூக்கு?

முரு: நடுவர் அவர்களே, இவரு என் மூக்கை ஒடைச்சுட்டாரு. உடனே இவரைக் கைது செஞ்சு ஜெயிலிலே போடச்  சொல்லுங்க.

எஸ் எஸ்: இருங்க. மொதல்ல என் மூக்கு இருக்கான்னு பார்த்துக்கறேன். நல்லவேளை, அப்படியேதான் இருக்கு. யார் அங்கே, இந்த மணியைக் கைது செய்யுங்க!

மணி: இவரு பெரிய மகாராஜா. யாரங்கேன்னு கை தட்டினதும் ரெண்டு சிப்பாய்ங்க கையிலே ஈட்டியோடு வந்து நிப்பாங்க! வடுமாங்காத் தலையனையெல்லாம் நடுவனாப் போட்டா இப்படித்தான். யோவ் நடுவா, நான் இவன் மூக்கை ஒடைக்கலைய்யா. இவன் பொய் சொல்றான்.

வேலு: அய்யய்யோ! நாங்கள்ளாம் கண்ணால பாத்தோம்.

மணி: ஏண்டா ஓணான், நீ வேலிக்குச் சாட்சி சொல்ல வந்துட்டியா? கண்ணால பாத்தானாம்! ஒன் கண்ணுல என்ன காமராவா இருக்கு? நான் அடிச்சதை ஃபோட்டோ புடிச்சு வச்சிருக்கியா என்ன?

எஸ் எஸ்: நானும் பார்த்தேனே! (பாடத் தொடங்குகிறார்) எந்தன் சபையில் உந்தன் அடியை நானும் பார்த்தேனே, ராஜாவே நானும் பார்த்தேனே!

மணி: (தனக்குள்) விட மாட்டாங்க போல இருக்கே! எப்படியோ சமாளிக்க வேண்டியதுதான். (உரக்க) அதாவது நடுவரே, இந்தப் பன்னி என்னோட நாற்காலியில ஒரு குண்டூசியை வச்சுட்டான். அது தெரியாம நான் ஒக்காந்து அது குத்தின வலி தாங்காம அலறி அடிச்சிக்கிட்டு வேகமா எழுந்தேனா, அப்ப என்னோட கை அவனோட தேங்காக் கொப்பரை மூக்கில பட்டுடுச்சு, அவ்வளவுதான்.

வேலு: அடி ஆத்தாடி! அத்தனையும் பொய்! குண்டூசி எங்கே? காட்டச் சொல்லுங்க.

மணி: (தனக்குள்) நல்ல வேளை குண்டூசி குத்தின எடத்தைக் காட்டச் சொல்லுங்கன்னு சொல்லாம விட்டானே, கொரங்குத் தலையன்! சரி கீழே ஏதாவது குண்டூசி கெடக்கான்னு தேடுவோம்.... ம்ம்ம்.. ஒரு ஆணிதான் இருக்கு. சரி, இதையே காமிச்சுப் பெரிய குண்டூசின்னு சொல்லிச் சமாளிக்க வேண்டியதுதான்! (குனிந்து அதை எடுத்து) நடுவரே, இதோ அந்தக் குண்டூசி!
(ஆணியை நடுவர் முகத்துக்கு நேரே எறிய, அது நடுவர் நெற்றிப் பொட்டில் குத்தி ரத்தத் துளி வெளிப்படுகிறது)

எஸ் எஸ்: ஆ! சர்க்கஸ்ல கத்தி வீசறவன் மாதிரி குறி பார்த்து வீசிட்டானே! இந்த சந்தர்ப்பத்துக்காக எவ்வளவு நாள் காத்துக்கிட்டிருந்தானோ தெரியலே!

வேலு: கொலை கொலை, ரத்தம்!

மணி:  டேய்! கொடலை உருவிடுவேன்டா கொய்யாக்காத் தலையா! ரத்தத்தைக் கண்டாலே மயக்கம் போட்டு விழறவனெல்லாம் இங்கே எதுக்குடா வந்தீங்க?

முரு: நடுவரே, இவரை உடனே உள்ளே புடிச்சுப் போடச் சொல்லுங்க. இல்லேனா நம்ப எல்லாரையுமே இவரு கொன்னு போட்டுடுவாரு.

மணி: அவன் கெடக்கான் விடுங்க நடுவரே. ஒங்க நெத்தியிலே இருக்கிற ரத்தத்துளி குங்குமப்பொட்டு மாதிரி எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?

எஸ் எஸ்: குங்குமப்பொட்டா? இது தெரிஞ்சா, நாளைக்கு ஒருவேளை அந்தக் கட்சிக்குப் போக வேண்டியிருந்தா, அந்தத் தலைவர் நம்மளை உள்ளே சேர்க்க மாட்டாரே! (நெற்றியைக் கைகுட்டையால் அழுந்தித் துடைத்தபடி) இந்த வெளையாட்டுக்கு நான் வரலேப்பா! நான் வீட்டுக்குப் போறேன். (போகிறார்.)

மணி: போய்ச்சேரு நல்லபடியா! (முருகனிடம்) டேய் பனங்காய்த்தலையா, நீ சொன்ன ஆட்டம் நல்லாத்தாண்டா இருந்தது. ஆமாம். மூக்கிலே ரத்தம் ஒழுகுதே. அடி பலமாப் பட்டுடுச்சா?

முரு: அதான் இல்லே! இன்னிக்கு என்ன தேதி?

மணி: ஏப்ரல் ஒண்ணு. அதுக்கென்ன? ஓ, இன்னிக்கு முட்டாள் தினம் இல்லே! ஒன்னோட நாள் ஆச்சே!

முரு: முட்டாளானது நான் இல்லியே, நீங்கதானே!

மணி: என்னடா சொல்றே?

முரு: அண்ணே! ஒரு சின்ன பிளாஸ்டிக்  சாஷேயில கொஞ்சம் சிவப்பு இங்க்கு ஊத்தி அதை என் மூக்குக்க்குள்ளே வச்சிருந்தேன். ஒங்க கை பட்டதும் அந்த சாஷே ஒடஞ்சு  சிவப்ப் இங்கு கொட்ட ஆரம்பிச்சுது. நீங்களும் அதை ரத்தம்னு நெனச்சு ஏமாந்துட்டீங்க! எப்படி என் ஐடியா?

மணி: மூக்குகுள்ள சாஷே வச்சிருந்தியா? ஏண்டா, அது என்ன மூக்கா, இல்லே போஸ்ட் ஆஃபிஸ் மெயில் பேகா? இருக்கட்டும். இப்ப நெசமாவே ரத்தம் வரவழைச்சுக் காட்டறேன் பாரு!

(மணி முஷ்டியை மடக்கி முருகனின் மூக்கைக் குறி வைத்துத் தாக்க, முருகன் குனிந்து கொள்கிறார். மணியின் கை முஷ்டி முருகனின் தலையில் மோதி அவர் வலியால் துடிக்க, முருகனும் வேலுவும் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்!)


Tuesday, September 18, 2012

3. மாண்பு மிகு மந்திரி

மந்திரியாகி விட்டாலே சங்கடம்தான். இந்த மக்களுக்கு இலவசமாக எவற்றையாவது கொடுத்தாக வேண்டும். அதே சமயம் அவை மற்ற்வர்கள் முன்பே கொடுத்ததாக இருக்கக் கூடாது. அதனால் நான் நிறைய யோசனை செய்து, இதுவரை யாரும் செய்யாத, மக்களுக்கு உண்மையிலேயே பயன்படக் கூடிய சில இலவசத் திட்டங்களை என் ம்னதுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறேன்.

முதலில் மக்களுக்கு வேண்டியது சோறு. அடேடே, அதற்குள் அவசரப்பட்டு, எல்லோருக்கும் இலவசமாகச் சோறு போடப் போவதாக முடிவு செய்து விடாதீர்கள். இன்றைய நமது நாடு என்ன அந்தக் காலத்துச் சோறுடைத்த சோழ நாடா, அல்லது ஆனை கட்டிப் போரடித்த தென்பாண்டிச் சீமையா? தற்போதைய வளர்ச்சி விகிதப்படி, நம் நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். அதுவரையில் நம் மக்கள் வெறும் வயிற்றோடு எப்படி இருக்க முடியும்? அதனால், ஏழை மக்கள் தங்கள் காய்ந்த வயிற்றில் போட்டுக்கொள்ள வசதியாக, 'இலவச ஈரத்துண்டு வழங்கும் திட்டம்'தான் என் முதல் திட்டமாக இருக்கும்!

ஈரத்துண்டுகளுக்கு நான் எங்கே போவேன் என்று யாரும் யோசிக்க வேண்டாம். கான்ட்ராக்ட் மூலம் காய்ந்த துண்டுகளை வாங்கி, மந்திரியானவுடன் என் வீட்டு முகப்பில், சில (நூறு) கோடி ரூபாய்களில்  நான் கட்டப்போகும், 24 மணி நேரமும் இயங்கும் வண்ண நீரூற்றிலிருந்து வரும் நீரில் அவற்றை நனைத்துத்தான் மக்களுக்கு விநியோகிப்பேன். முதல் சில துண்டுகளை நான் விநியோகித்தவுடன், மற்ற்வற்றை என் வீட்டில் இருப்பவர்களும், கட்சிக்காரர்களும் அரசு அதிகாரிகளும் விநியோகிப்பார்கள்.  அது மட்டும் இன்றி, ஏழை மக்கள், தேவைப்படும்போதெல்லாம் என் வீட்டுக்கு வந்து சிறு கட்டணம் செலுத்தித் தங்கள் காய்ந்த துண்டுகளை மீண்டும் ஈரப்படுத்திக்கொண்டு போகலாம். நான் மந்திரியாக இல்லாவிட்டாலும், மக்கள் இந்தச் சேவையை என் வீட்டில் பெறலாம். அவர்களுக்கு இந்தச் சேவை ஆயுள் முழுவதும் தேவைப் படுமே!

இடுப்பில் போட்டுக்கொள்ள ஈரத்துண்டு கிடைப்பதால், மக்கள் எப்போதும் பட்டினியாகவே இருந்து விட முடியுமா என்ன? ரேஷனில் போடும் அரிசியின் அளவும் குறைந்து, விலையும் ஏறி விட்டதே என்று வருந்துபவர்களின் குறையைப் போக்குவதற்காக, ஒரு இலவச அரிசித் திட்டமும் உண்டு. ரேஷன் கடைகளில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 30 கிலோ அரிசி இலவசமாக - ஆமாம், இலவசமாகத்தான் - வழங்கப்ப்படும். ரேஷன் கடைகளின் இயல்பான பணிக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக, இந்த இலவச அரிசி ஒவ்வொரு மாதமும் முப்பத்திரண்டாம் தேதி மட்டும் வழங்கப்படும்!

உணவுப் பிரச்னையைத் தீர்க்க நீண்ட காலத் திட்டங்கள் தேவை என்பதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு. நமது வயிற்றின் கொள்ளளவைக் குறைப்பதன் மூலம், நாம் உண்ணும் உணவின் அளவு குறைந்து நிறைய உணவுப் பொருட்கள் மிச்சப்படும். இதனால் அனைவருக்கும் உணவு கிடைக்கும். உணவு உற்பத்தியை அதிகரிக்காமலேயே, அனைவருக்கும் உணவளிக்க வழி வகுக்கும் இந்தப் புரட்சிகரமான திட்டத்தைச் செயல் படுத்த, நான் பல வெளி நாடுகளுக்குச் சென்று விவரம் சேகரித்த பின், நமது மருத்துவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, ஏழைகளின் வயிற்றின் கொள்ளளவைக் குறைக்க இலவச அறுவை சிகிச்சைத் திட்டம் செயல்படுத்தப்படும். (ஏழைகளிடம் இத்திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல வழக்கம் போல் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். குடும்பக் கட்டுப்பாடு, சத்துணவு போன்ற பணிகளில் ஈடுபட்டு மீதமிருக்கும் நேரத்தில் ஆசிரியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவர்!)

வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடுமையைக் குறைக்கும் விதமாக,வேலையில்லா இளைஞர்களுக்கு இலவச இட்லி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், மாதம் ஒரு நாள் வேலையில்லா இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு இட்லி வழங்கப்படும். ஒவ்வொரு இட்லியின் மீதும் எங்கள் தலைவரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

உணவுக்குப்பின் உடை. என் பிறந்த நாளுக்காகக் கட்சித் தொண்டர்கள் அடிக்கும் போஸ்டர்கள், என் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.(போஸ்டர்கள் ஒட்டத்தான் நிறையத் தடை இருக்கிறதே!) ஆடையில்லாச் சிறுவர்கள் ஒரு நாளாவது போஸ்டர்களை இடையில் சுற்றிக்கொண்டு மானம் காத்துக் கொள்வதுடன், என் பிறந்த நாள் பற்றிய செய்தியையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதைத்தவிர, எனது கட்சிக்காரர்கள் கிழித்துப் போடும் மாற்றுக் கட்சியினரின் கொடிகளும் என் தொகுதி மக்கள் ஆடையாக அணிய ஏதுவாக அவர்களுக்கு வழங்கப்படும்!


உடைக்குப் பின் வருவது உறைவிடம். புதிதாக வீடுகள் கட்டக் காலி இடம் ஏதும் இல்லை என்பதால், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஏழை மக்கள் குடிசை போட்டுக்கொள்ள இடம் ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்படும். அவர்கள் குடிசை போட்டுக்கொள்ளத் தேவையான ஓலை அல்லது ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள், கல், மண் முதலியவை அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும்.(இவ்வாறு இயற்றப்படும் சட்டத்திற்கு யாராவது நீதி மன்றத்தில் தடை வாங்கினால் அதற்கு நான் பொறுப்பல்ல!)

இது தவிர, குடிசைப் பகுதிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டமும் அறிமுகப் படுத்தப்படும். இதற்கு அதிகச் செலவு ஆகும் என்பதால், மூடப்படாத அலுமினியக் கம்பிகள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும். மூடப்படாத மின்கம்பியின் பரிசம் பட்டு யாரும் இறந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மெயின் சுவிட்ச் அணைக்கப்படும். (காலை 6 மணியிலிருந்து, மாலை 6 மணி வரை வழக்கம்போல் மின்வெட்டு அமுலில் இருக்கும்!)

கொலை கொள்ளைகள் அதிகரித்து வருவதாக மக்கள் புகார் கூறுவதால், மக்களின் பாதுகாப்புக்கு உதவும் வகையில், தேவைப்படுபவர்களுக்கெல்லாம்  இலவசமாகக் கத்தி, துப்பாக்கி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்கள் வழங்கப்படும். அதற்குப் பிறகு யாரும் போலீசில் எந்தப் புகாரும் கொடுக்க வழி இருக்காது என்பதுடன், போலீஸ் படை முழுவதையும் அமைச்ச்ர்களின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்த முடியும்.

'வாழ விடு, அல்லது சாக விடு' என்பது எங்கள் தலைவர் எங்களுக்கு வழங்கிய தாரக மந்திரம். அவரது அறிவுமொழிக்கேற்ப, சாக விரும்புகிறவர்களுக்கு, விரைவில் செயல் பட்டு அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வீரியம் மிகுந்த விஷம் இலவசமாக வழங்கப்படும். ஆனால் தற்கொலையைச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால், தற்கொலை செய்து கொள்வதைச் சட்டபூர்வமாக ஆக்கும் விதத்தில் அரசியல் சட்டத்தைத் திருத்தும்படி, (மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி இல்லாத நேரங்களில்) மத்திய அரசுடன் போராடுவோம்.

நான் இதுவரை சொன்னதெல்லாம் ஒரு சாம்ப்பிள்தான்.இன்னும் பல 'புரட்சி இலவசத் திட்டங்கள்' என் மனக்கிடங்கில் புதைந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் இப்போதே சொல்லி விட்டால், அப்புறம் எல்லாவற்றையும் யாராவது காப்பி அடித்து விடுவார்கள்.

எனவே, மற்ற திட்டங்களை நான் மந்திரியாக ஆன பிறகுதான் வெளியிட உத்தேசம். ஆனால் ஒன்று. நான் மந்திரியாக ஆனால், இலவசத் திட்டங்கள் ஆறாக ஓடிக் கடலாகப் பெருகுவது மட்டும் திண்ணம் என்று மட்டும் என்னால் அறுதியிட்டுக் கூற முடியும்!

Wednesday, March 21, 2012

2. வதந்திகளைப் பரப்புங்கள்!



பொதுவாக இந்தியர்களுக்கு Sense of Humour (நகைச்சுவை உணர்வு) குறைவு என்று ஒரு கருத்து உண்டு. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால் நம்முடைய Sense of Rumour ஐ (வதந்தி ஆர்வம்) யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

குழந்தைகளுக்கு அடுத்தபடியாக நம் நாட்டில் அதிகமாக உற்பத்தியாவது வதந்திகள்தான்.  மின் தட்டுப்பாடு, தொழிலாளர் பிரச்னை, மூலப்பொருள்  பற்றாக்குறை போன்ற எவற்றினாலும் உற்பத்தி பாதிக்கப்படாத பொருள் ஒன்று உண்டென்றால், அது வதந்திதான். இதற்கான மூலப்பொருளுக்குப் பஞ்சமே இல்லை (சில சமயம் மூலப்பொருளே தேவைப்படுவதில்லை!) உற்பத்திக்குத் தேவையான உழைப்பு சம்பந்தப்பட்டவர்களால் இலவசமாகவே வழங்கப்படுகிறது. தேவையான சக்தியும், தானே உற்பத்தியாவதுடன், எடுக்க எடுக்கக் குறைவதே இல்லை. சொல்லப்போனால், வதந்தியை உருவாக்கவும், பரப்பவும் பயன்படுத்தப்படும் சக்தியைச் சேமிக்க முடியுமானால், அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி கூடச் செய்யலாம்!

வதந்தித் தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம், கதவடைப்பு எதுவும் கிடையாது. வதந்திகளை உருவாக்குபவர்கள் (producers), விநியோகிப்பவர்கள் (Distributors), பரப்புபவர்கள் (Dealers), செவிமடுப்பவர்கள் (Consumers) ஆகியோரிடையே நிலவும் நல்லுறவு மற்ற தொழில், வர்த்தகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக விளங்குகிறது. வேறு எந்தப் பொருளுக்கும் இல்லாத ஒரு  சிறப்பு வதந்திக்கு உண்டு. வதந்தியை நுகர்பவரே (Consumer) பரப்புகிறவராகவும் (Distributor) ஆகும்  வாய்ப்பைப்  பெறுகிறார். வேறு  எந்த  நுகர்வோருக்கும்  இந்தச்  சலுகை  கிடைக்காது. இந்தச் சலுகையினால், நுகர்பவர் மனத்திருப்தி என்கிற லாபத்தைப் பெறுகிறார்.

தேவையான தருணங்களில் உற்பத்தியைப் பெருக்க, வதந்தித் தொழிற்சாலைகள் தயங்குவதே இல்லை.

முன்பெல்லாம் வதந்தி என்பது அருவருக்கத்தக்கதாகக் கருதப் பட்டது. ஆனால் இப்போது அப்படி  இல்லை. எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் (எந்த மொழிப் பத்திரிகையானாலும் சரி), அதில்  ஒரு சில வதந்திகளாவது கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஆனால் வதந்திகள் அங்கே பலவிதமான கௌரவமான பெயர்களில் வெளியிடப்படுகின்றன. 'கிசுகிசு,' 'காதில் விழுந்தவை,' 'ரகசியம் பரம ரகசியம்,' 'கேள்விப்படுகிறோம்' போன்ற பகுதிகள் இல்லாத பத்திரிகைகளைப்  பார்ப்பது அரிது.  செய்திப் பத்திரிகைகளும் சளைத்தவை அல்ல. அவற்றில், 'அதிகாரபூர்வமற்ற தகவல்கள்,' 'எங்களுக்குக்  கிடைத்த தகவல்படி,' 'பெயர் சொல்ல விரும்பாத ஒரு தலைவர் அல்லது அதிகாரி கூறியது,'  என்ற  பலே வடிவங்களில் வதந்திகள் பிரசுரமாகின்றன.

இவற்றிலிருந்தெல்லாம்  நாம்  தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வதந்திகளை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்!

வதந்திகள் வாழ்க்கைக்குச் சுவையூட்டுகின்றன, உற்சாகமளிக்கின்றன, சுவாரஸ்யம் தருகின்றன. வதந்திகள் இல்லாவிட்டால் வாழ்க்கை மிகவும் டல் அடிக்கும். பொதுவாக மனிதர்களின்  கவனம் கூர்மையடைவதே வதந்திகளைக் கேட்கும்போதுதான். வதந்திகள் கவனத்தில் பதிவதுபோல் செய்திகள் பதிவதில்லை அல்லவா?

வதந்திகளால்   சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவதில்லையா என்ற கேள்வி எழலாம். நியாயமான கேள்விதான். இதற்கு நியாயமான பதிலும் உண்டு. ஆமாம். உண்மைதான். அதற்கு என்ன செய்ய முடியும்? வதந்திகளைக் கேட்டு ரசித்து மகிழ்பவர்களோடு ஒப்பிட்டால், வதந்திகளால் பாதிக்கப்படுபவர்கள் மிகச் சிலர்தான். எனவே ஜனநாயக மரபுகளின்படி, பெரும்பான்மையோருக்கு எது உகந்ததோ அதை ஏற்றுக்கொள்வதுதானே  வழி? எனவே பாதிக்கப்படுபவர்களின் பலவீனமான எதிர்ப்புப் குரலை அலட்சியம் செய்ய வேண்டியதுதான்!

நாம் இப்போது 21 -ஆம் நூற்றாண்டை நோக்கி நடை போட்டுக்   கொண்டிருக்கிறோம். (ராஜீவ் காந்தி பிரதமராக இல்லாவிட்டாலும் நாம்            21 -ஆம் நூற்றாண்டைநோக்கிச் செல்வதை யாரும் தடுத்து விட முடியாதல்லவா?) தகவல் தொடர்புத் துறையில் முன்னேற்றம் அடைவதுதான் இப்போது நமக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. எந்த நவீனமான முறையைப் பயன்படுத்தினாலும் செய்திகள் பரவச் சில காலம் பிடிக்கிறது. உதாரணமாக எம்.ஜி.ஆர். இறந்த செய்தி எல்லோருக்கும் எட்டச் சில மணி நேரங்களாவது பிடித்திருக்கும். ஆனால் அவர் இறப்பதற்குப் பல மாதங்கள்  முன்பு அவர் இறந்து விட்டதாக ஒரு வதந்தி பரவியது. வதந்தி எங்கே துவங்கியது எப்படிப் பரவியது என்று புரிந்து கொள்வதற்குள் தமிழகத்தின் மூளை முடுக்குகளில் எல்லாம் பரவி ஆங்காங்கே கடையடைப்புகளும், வன்முறைகளும் நடைபெறத் தொடங்கி விட்டன.


வதந்தி பரவும் வேகத்தை யாராலாவது  அளக்க முடியுமானால், அதன் வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகம் என்பது புரியும். ஒளியின் வேகத்துக்கு இணையான வேகத்தை அடையும் முயற்சியில் விஞ்ஞானிகள் இன்னும் வெற்றி பெற வில்லை. அத்தகைய வேகத்தை எட்ட முடிந்தால் காலத்தையே வென்று விடலாம் என்பது ஐன்ஸ்டீனின் கணிப்பு. இந்த முயற்சியில் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும்  விஞ்ஞானிகள் வதந்தியின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினால் தங்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

வதந்தித் தொழிலை ஊக்குவிக்க அரசாங்கம் எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. தேசிய முன்னணி அரசின் பட்ஜெட்டில் கூட இந்தத் தொழிலுக்கு எந்த வித வரிவிலக்கும் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் இது போன்ற சலுகைகளை நம்பியிருக்கவில்லை. அவர்கள் தற்சார்பு உடையவர்கள்!

எனவே வதந்திகளைப் பற்றி இழிவாகப் பேசுவதையும், வதந்திகளைப் பரப்புவதில் ஈடுபடுவோர்களைப் பற்றி மட்டமாகப் பேசுவதையும் கைவிட வேண்டும். செய்தியாளர்களை News Reporters என்று குறிப்பிடுவது போல் வதந்தியாளர்களை Rumour Reporters என்று மரியாதையாகக் குறிப்பிட வேண்டும். Rumour Mongers போன்ற வசைச் சொற்களைப்  பயன்படுத்தக் கூடாது.

வதந்திகளை ஊக்குவிக்க, ரூமர் டிரஸ்ட் ஆப் இந்தியா (RTI), யுனைடட் ரூமர் ஆப் இந்தியா (URI), ரூமாச்சார் போன்ற செய்தி நிறுவனங்களை நிறுவ வேண்டும்.
('தினமணி கதிர்' 23 -9-1990 - இல் வெளியானது. எழுதியவர்: விஜய சாரதி)

Thursday, March 15, 2012

1. 'இதுதாண்டா' பைத்தியம்

ஏதோ என்னைச் சுட்டிக்காட்டி நாலு பேர் பேசிக் கொள்வதையே இந்தக் கட்டுரையின் தலைப்பாக வைத்து விட்டேன் என்று யாரும் நினைக்க வேண்டாம் .தமிழ்நாட்டில் பலருக்கும் இப்போது*  பிடித்திருக்கும் வியாதியின் பெயர்தான் இது.

என்னதான் சோமாறி, பேமானி போன்ற பல வார்த்தைகளை உருவாக்கியவர்கள் என்ற போதிலும், பொதுவாக நாம் மரியாதை தெரிந்தவர்கள்தான். ஆனால், எந்த வேளையில், இந்த 'இதுதாண்டா போலிஸ்' படம் வெளியாகி, இந்த 'இதுதாண்டா' பைத்தியம் நம்மைப் பற்றியதோ, அப்போதே நமது மரியாதை காட்டும் பண்பும், 'இதுதானாடா மரியாதை?' என்று மற்றவர்கள் கேட்கும் அளவுக்கு வந்து விட்டது.

என் பக்கத்து வீட்டில் வசிக்கும் பத்மநாபன் (நான் முன்பு பல ஜன்மங்களில் தொடர்ந்து செய்த பாவங்களுக்கும், பத்மநாபன் என் பக்கத்து வீட்டுக்காரராக அமைந்ததற்கும் உள்ள தொடர்பு பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை.'  இதைப்பற்றி 'இதுதாண்டா பூர்வ ஜன்ம பலன்' என்கிற வேறொரு கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன்) பற்றி முதலில் குறிப்பிட வேண்டும்.

மகாராஜராஜஸ்ரீ உயர்திரு மிஸ்டர் பத்மநாபன்காருஜி அவர்கள் பொதுவாகவே மற்றவர்களிடமிருந்து அதிகமாக மரியாதையை எதிர்பார்ப்பவர். (அவர் மற்றவர்களிடமிருந்து எதிபார்ப்பதையெல்லாம், மற்றவர்கள் அவரிடம் எதிர்பார்த்து ஏமாந்தால், அதற்கு அவர் பொறுப்பல்ல!) ஒருமுறை அவரை நான் 'என்ன சார்?' என்று விளித்ததற்காக, நான் மரியாதை கற்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றி எனக்கு ஒரு நீண்ட வகுப்பே எடுத்தார். வகுப்பு முடிந்ததும், நான் எந்த விதத்தில் மரியாதை தவறி நடந்து கொண்டு விட்டேன் என்று நான் கேட்ட சந்தேகத்திற்கு அவர் அளித்த விளக்கம்: நான் 'என்னங்க சார்' என்று சொல்லியிருக்க வேண்டுமாம். 'சரிங்க சார்' என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். வேறு என்னங்க சார் செய்வது?

பத்மநாபன் இப்படி என்றால், என் மூன்று வயதுப் பையன் மரியாதைகள் அற்ற சமுதாய அமைப்பை நிறுவும் லட்சியம் கொண்டவன்! இந்தச் சிந்தனை வேறுபாட்டினால் இருவருக்கும் இடையே அடிக்கடி கடுமையான கருத்து மோதல்கள் ஏற்படுவது உண்டு. இறுதியில், என் குமாரன், 'போடா  முட்டாள்' என்று சொல்லி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது வழக்கம்!

பத்மநாபன் பலமுறை என்னிடம் குறைப்பட்டுக்கொண்டதன் பேரில், என் பையனுக்கு சுமார் ஆறு மாதங்கள் மரியாதைக்கலையில் டிப்ளமா பெறுமளவுக்குப் பயிற்சி அளித்த பிறகு, பெருமையுடனும் (தைரியத்துடனும்) அவனை பத்மநாபனிடம் அழைத்துச் சென்றேன்.


வசிஷ்டர் முன்பு நின்ற விஸ்வாமித்திரர் போல ப.வீ.ப வின் முன்பு பணிவாக நின்ற என் பையன், 'குட் மார்னிங் அங்க்கிள்' என்றான். பத்மநாபனின் முகம் மழைக்காலத்தில் மலரும் தாமரை போல் மலர்ந்தது. (மழைக்காலத்தில் சூரியன் எப்போதாவதுதான் தலை காட்டும் , ஆதலால், தாமரையும் எப்போதாவதுதான் மலரும் என்று இந்த உவமைக்குப் பொருள் கொள்க!)
'பரவாயில்லையே!' என்றார் ப.வீ.ப. ('அங்க்கிள்ஜி    என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்திருப்பார்!)

தொடர்ந்து, என் பையன், "சாப்பிட்டீங்களா?" என்றான்.
"அடே!"
"எங்க வீட்டுக்கு வாங்க."
"என்னடா இது?" என்றார் ப.வீ.ப. நம்ப முடியாத மகிழ்ச்சியுடன், என்னைப் பார்த்து. (இதனால், 'என்னடா இது?' என்று அவர் என்னை விளித்ததாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பத்மநாபன் மரியாதை தெரிந்தவர்!)

அப்போதுதான், இரண்டாவது முறையாக அந்த அணுகுண்டு விழுந்தது. (முதல் முறை விழுந்தது ஹிரோஷிமாவில் என்று கேள்வி.)

"இதுதாண்டா  மரியாதை!"  என்றான் என் பையன்.

இப்போது பத்மநாபன் என் பக்கத்து வீட்டில் இல்லை. வீடு மாற்றிக் கொண்டு போய் விட்டார். (என் பூர்வ ஜன்மப் பலனில் முதல் பாகம் முற்றியது!)

இந்த 'இதுதாண்டா' பைத்தியம் என் பையனுக்கு மட்டுமே படித்திருந்தால் நான் அதிகம் கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் என்னைச் சுற்றி இருக்கும் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'இதுதாண்டா' என்று சொல்லிக் கொண்டிருப்பதால்தான் நான் இது பற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

ஒருநாள் மார்க்கெட்டுக்குக் காய்கறி வாங்கப் போயிருந்தேன். ஒரு கூடைக்காரியிடம் வெண்டைக்காய் வாங்கப் போனால், பக்கத்தில் இருந்த இன்னொரு கூடைக்காரி, "இதுதாண்டா பிஞ்சு வெண்டை" என்றாள். அன்று என் வீட்டில் சுட்ட அப்பளம்தான்!

கோவிலுக்குப் போனால், அர்ச்சகர் தீபாராதனை காட்டிக் கொண்டே, "இதுதாண்டா முருகன்" என்றார்.

ஆஃபீசில் சம்பளம் வாங்கும்போது காஷியர் சம்பளக் கவரைக் கையில் கொடுத்து, "இதுதாண்டா சம்பளம்" என்கிறார்.

ஒருமுறை கடற்கரைக்குப் போனபோது, படகு மறைவில் உட்கார்ந்திருந்த ஒரு காதல் ஜோடி என் கண்ணில் பட்டு விட்டார்கள். வெட்கப்படுவார்களோ, பயந்து அலறுவார்களோ என்று நான் சங்கடப் பட்டுக்கொண்டிருந்தபோது, காதலன் என் முன்னே வந்து, "இதுதாண்டா காதல்" என்றானே பார்க்க வேண்டும்!

இப்படியே போனால், இந்த 'இதுதாண்டா' பைத்தியம் முற்றிப் போய் மரியாதை என்பதே நமக்கு மறந்து போய் விடும்.

எனவே, 'இதுதாண்டா' என்ற வார்த்தைக்கு அரசாங்கம் உடனே தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தடை உடனே விதிக்கப்படா விட்டால் என்ன ஆகும் என்று சொல்லி விடுகிறேன். சட்டம் வரத் தாமதமானால் அதற்குள் எல்லோருக்கும் இந்த 'இதுதாண்டா' போடாமல் பேசவே வராது என்று ஆகி விடும். சட்டம் தாமதமாக வந்தால், சட்டம் வந்த பிறகும் பழக்கத்தை விட முடியாமல் பலரும் 'இதுதாண்டா' போட்டே பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஆனாலும் சட்டம் சட்டம்தானே? 'இதுதாண்டா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்  என்று வைத்துக் கொள்வோம்.

மாஜிஸ்திரேட் கேட்கிறார்: "தடை செய்யப்பட வார்த்தையைப் பயன்படுத்தினீர்களா?"

"ஆமாம்."

"ஐநூறு ரூபாய் அபராதம்!"

"ஐநூறு ரூபாயா? அக்கிரமமாக இருக்கிறதே?"

"இதுதாண்டா சட்டம்" என்று பழக்க தோஷத்தில்  சொல்லி விட்டு, மாஜிஸ்திரேட் நாக்கைக் கடித்துக் கொள்கிறார். அப்புறம், மாஜிஸ்திரேட்டுக்கு யார் அபராதம் விதிப்பது?

இந்தக் கட்டுரையை என் நண்பரான ஒரு பத்திரிகை ஆசிரியரிடம் காட்டினேன். படித்துப் பார்த்து விட்டு "என்னய்யா, ஸில்லியாக இருக்கிறதே!" என்றார்.

"இதுதாண்டா நகைச்சுவை" என்றேன்.

பளார் என்று ஒரு அறை விட்டார்.

"என்ன சார் இது?' என்றேன் கோபத்துடன்.

"இதுதாண்டா சன்மானம்" என்றார்.

"இதுதாண்டா உலகம்" என்று சொல்ல நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டேன்.

(* 'இதுதாண்டா போலிஸ்' என்ற திரைப்படம் வெளியான நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது)