Wednesday, March 21, 2012

2. வதந்திகளைப் பரப்புங்கள்!



பொதுவாக இந்தியர்களுக்கு Sense of Humour (நகைச்சுவை உணர்வு) குறைவு என்று ஒரு கருத்து உண்டு. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால் நம்முடைய Sense of Rumour ஐ (வதந்தி ஆர்வம்) யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

குழந்தைகளுக்கு அடுத்தபடியாக நம் நாட்டில் அதிகமாக உற்பத்தியாவது வதந்திகள்தான்.  மின் தட்டுப்பாடு, தொழிலாளர் பிரச்னை, மூலப்பொருள்  பற்றாக்குறை போன்ற எவற்றினாலும் உற்பத்தி பாதிக்கப்படாத பொருள் ஒன்று உண்டென்றால், அது வதந்திதான். இதற்கான மூலப்பொருளுக்குப் பஞ்சமே இல்லை (சில சமயம் மூலப்பொருளே தேவைப்படுவதில்லை!) உற்பத்திக்குத் தேவையான உழைப்பு சம்பந்தப்பட்டவர்களால் இலவசமாகவே வழங்கப்படுகிறது. தேவையான சக்தியும், தானே உற்பத்தியாவதுடன், எடுக்க எடுக்கக் குறைவதே இல்லை. சொல்லப்போனால், வதந்தியை உருவாக்கவும், பரப்பவும் பயன்படுத்தப்படும் சக்தியைச் சேமிக்க முடியுமானால், அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி கூடச் செய்யலாம்!

வதந்தித் தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம், கதவடைப்பு எதுவும் கிடையாது. வதந்திகளை உருவாக்குபவர்கள் (producers), விநியோகிப்பவர்கள் (Distributors), பரப்புபவர்கள் (Dealers), செவிமடுப்பவர்கள் (Consumers) ஆகியோரிடையே நிலவும் நல்லுறவு மற்ற தொழில், வர்த்தகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக விளங்குகிறது. வேறு எந்தப் பொருளுக்கும் இல்லாத ஒரு  சிறப்பு வதந்திக்கு உண்டு. வதந்தியை நுகர்பவரே (Consumer) பரப்புகிறவராகவும் (Distributor) ஆகும்  வாய்ப்பைப்  பெறுகிறார். வேறு  எந்த  நுகர்வோருக்கும்  இந்தச்  சலுகை  கிடைக்காது. இந்தச் சலுகையினால், நுகர்பவர் மனத்திருப்தி என்கிற லாபத்தைப் பெறுகிறார்.

தேவையான தருணங்களில் உற்பத்தியைப் பெருக்க, வதந்தித் தொழிற்சாலைகள் தயங்குவதே இல்லை.

முன்பெல்லாம் வதந்தி என்பது அருவருக்கத்தக்கதாகக் கருதப் பட்டது. ஆனால் இப்போது அப்படி  இல்லை. எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் (எந்த மொழிப் பத்திரிகையானாலும் சரி), அதில்  ஒரு சில வதந்திகளாவது கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஆனால் வதந்திகள் அங்கே பலவிதமான கௌரவமான பெயர்களில் வெளியிடப்படுகின்றன. 'கிசுகிசு,' 'காதில் விழுந்தவை,' 'ரகசியம் பரம ரகசியம்,' 'கேள்விப்படுகிறோம்' போன்ற பகுதிகள் இல்லாத பத்திரிகைகளைப்  பார்ப்பது அரிது.  செய்திப் பத்திரிகைகளும் சளைத்தவை அல்ல. அவற்றில், 'அதிகாரபூர்வமற்ற தகவல்கள்,' 'எங்களுக்குக்  கிடைத்த தகவல்படி,' 'பெயர் சொல்ல விரும்பாத ஒரு தலைவர் அல்லது அதிகாரி கூறியது,'  என்ற  பலே வடிவங்களில் வதந்திகள் பிரசுரமாகின்றன.

இவற்றிலிருந்தெல்லாம்  நாம்  தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வதந்திகளை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்!

வதந்திகள் வாழ்க்கைக்குச் சுவையூட்டுகின்றன, உற்சாகமளிக்கின்றன, சுவாரஸ்யம் தருகின்றன. வதந்திகள் இல்லாவிட்டால் வாழ்க்கை மிகவும் டல் அடிக்கும். பொதுவாக மனிதர்களின்  கவனம் கூர்மையடைவதே வதந்திகளைக் கேட்கும்போதுதான். வதந்திகள் கவனத்தில் பதிவதுபோல் செய்திகள் பதிவதில்லை அல்லவா?

வதந்திகளால்   சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவதில்லையா என்ற கேள்வி எழலாம். நியாயமான கேள்விதான். இதற்கு நியாயமான பதிலும் உண்டு. ஆமாம். உண்மைதான். அதற்கு என்ன செய்ய முடியும்? வதந்திகளைக் கேட்டு ரசித்து மகிழ்பவர்களோடு ஒப்பிட்டால், வதந்திகளால் பாதிக்கப்படுபவர்கள் மிகச் சிலர்தான். எனவே ஜனநாயக மரபுகளின்படி, பெரும்பான்மையோருக்கு எது உகந்ததோ அதை ஏற்றுக்கொள்வதுதானே  வழி? எனவே பாதிக்கப்படுபவர்களின் பலவீனமான எதிர்ப்புப் குரலை அலட்சியம் செய்ய வேண்டியதுதான்!

நாம் இப்போது 21 -ஆம் நூற்றாண்டை நோக்கி நடை போட்டுக்   கொண்டிருக்கிறோம். (ராஜீவ் காந்தி பிரதமராக இல்லாவிட்டாலும் நாம்            21 -ஆம் நூற்றாண்டைநோக்கிச் செல்வதை யாரும் தடுத்து விட முடியாதல்லவா?) தகவல் தொடர்புத் துறையில் முன்னேற்றம் அடைவதுதான் இப்போது நமக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. எந்த நவீனமான முறையைப் பயன்படுத்தினாலும் செய்திகள் பரவச் சில காலம் பிடிக்கிறது. உதாரணமாக எம்.ஜி.ஆர். இறந்த செய்தி எல்லோருக்கும் எட்டச் சில மணி நேரங்களாவது பிடித்திருக்கும். ஆனால் அவர் இறப்பதற்குப் பல மாதங்கள்  முன்பு அவர் இறந்து விட்டதாக ஒரு வதந்தி பரவியது. வதந்தி எங்கே துவங்கியது எப்படிப் பரவியது என்று புரிந்து கொள்வதற்குள் தமிழகத்தின் மூளை முடுக்குகளில் எல்லாம் பரவி ஆங்காங்கே கடையடைப்புகளும், வன்முறைகளும் நடைபெறத் தொடங்கி விட்டன.


வதந்தி பரவும் வேகத்தை யாராலாவது  அளக்க முடியுமானால், அதன் வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகம் என்பது புரியும். ஒளியின் வேகத்துக்கு இணையான வேகத்தை அடையும் முயற்சியில் விஞ்ஞானிகள் இன்னும் வெற்றி பெற வில்லை. அத்தகைய வேகத்தை எட்ட முடிந்தால் காலத்தையே வென்று விடலாம் என்பது ஐன்ஸ்டீனின் கணிப்பு. இந்த முயற்சியில் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும்  விஞ்ஞானிகள் வதந்தியின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினால் தங்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

வதந்தித் தொழிலை ஊக்குவிக்க அரசாங்கம் எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. தேசிய முன்னணி அரசின் பட்ஜெட்டில் கூட இந்தத் தொழிலுக்கு எந்த வித வரிவிலக்கும் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் இது போன்ற சலுகைகளை நம்பியிருக்கவில்லை. அவர்கள் தற்சார்பு உடையவர்கள்!

எனவே வதந்திகளைப் பற்றி இழிவாகப் பேசுவதையும், வதந்திகளைப் பரப்புவதில் ஈடுபடுவோர்களைப் பற்றி மட்டமாகப் பேசுவதையும் கைவிட வேண்டும். செய்தியாளர்களை News Reporters என்று குறிப்பிடுவது போல் வதந்தியாளர்களை Rumour Reporters என்று மரியாதையாகக் குறிப்பிட வேண்டும். Rumour Mongers போன்ற வசைச் சொற்களைப்  பயன்படுத்தக் கூடாது.

வதந்திகளை ஊக்குவிக்க, ரூமர் டிரஸ்ட் ஆப் இந்தியா (RTI), யுனைடட் ரூமர் ஆப் இந்தியா (URI), ரூமாச்சார் போன்ற செய்தி நிறுவனங்களை நிறுவ வேண்டும்.
('தினமணி கதிர்' 23 -9-1990 - இல் வெளியானது. எழுதியவர்: விஜய சாரதி)

No comments:

Post a Comment