Monday, August 7, 2017

9. கருப்பு மை

கருப்பு மை 
(பிரசுரமாகாத கதை எழுதுவோர் சங்கத்தின் கையெழுத்துப் பத்திரிகை)
ஆசிரியர்: விடாக்கண்டன் 
முயற்சி:1                                                                                                                      தோல்வி:4

வாடகை: 15 காசுகள்  

தலையங்கம் 
செய்து முடி அல்லது செத்து மடி!

பத்திரிகைக் காகிதத் தட்டுப்பாட்டினாலும், விலையேற்றத்தினாலும் எல்லாப் பத்திரிகைகளும் விலையேற்றம் செய்துள்ளன - வழக்கம் போல 'தவிர்க்க முடியாத காரரணங்களால்' என்ற புலம்பலுடன்! ஆனால் எழுதும் வெள்ளைக் காகிதத்தின் மிகக்  கடுமையான விலையேற்றத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர்களைப் பற்றியோ, கையெழுத்துப் பத்திரிகைகளைப் பற்றியோ இந்நாட்டில் யாருக்கும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை!

குறிப்பாக, 'பிரசுரமாகாத கதை எழுதுவோர்' இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதும் போதாதற்கு, தபால் கட்டணங்கள் வேறு கடுமையாக உயர்ந்து விட்டதால், இவர்களில் பலர் எழுத்துப் பணியையே துறந்து விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தகைய நிலை நேர்ந்தால், அதனால் இந்த நாட்டின் பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே, இப்போது அமலில் இருக்கும் நெருக்கடி நிலை அதிகாரங்களை பயன்படுத்தி அரசு ஏழை எழுத்தாளர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

பத்திரிகைகளை வாங்குபவர்கள் அவற்றைப் படித்த பின் பழைய பேப்பர்காரர்களிடம் போட்டு விடுவார்கள். ஆனால் எழுத்தாளர்களோ பணம் செலவழித்துப் பேப்பர் வாங்கி  கதை, கட்டுரை எழுதி, திரும்பிப் பெறுவதற்கான தபால் தலை இணைத்துப் பத்திரிகைகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் கதைகள் பிரசுரிக்கப்படாமல் திரும்ப வந்தால், அவற்றைப் பழைய பேப்பர்காரர்களிடம் போட மனம் இல்லாமல் தவிக்கிறார்கள். மண்ணெண்ணெய் விலை கிடுகிடுவென்று உயர்ந்து, தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கும்போது, இவர்கள் கதைகளை இவர்கள் இல்லத்தரசிகள் அடுப்பு எரிக்கப் பயன்படுத்தும்போது இவர்கள் உள்ளமும் அல்லவா சேர்ந்து எரிகிறது!

எனவே, ஏழை எழுத்தாளர்களின் குறைகளைப்  போக்கும் வகையில் அவசர நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். எழுதும் காகிதத்தின் விலையை உடனே குறைக்க வேண்டும். பத்திரிகைக் காகித விலை உயர்வைக் காரணம் காட்டித் தங்கள் பத்திரிகைகளின் விலையை அடிக்கடி உயர்த்திக் கொண்டிருக்கும் பத்திரிகைகள் எழுத்தாளர்களின் சிரமத்தை உணர்ந்து, கதைகளைத் திருப்பி அனுப்புவதற்கான தபால் தலைக் கட்டணத்தைத் தாங்களே ஏற்க வேண்டும். (திருப்பி அனுப்ப வேண்டிய தேவையே ஏற்படா வண்ணம் கதைகளை பிரசுரித்துச் சன்மானம் வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்!)

இந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் பிரசுரமாகாத கதை எழுதுவோர் பெரும் போராட்டத்தில் இறங்கத்  தயங்க மாட்டார்கள். போராட்டத்தின் முதல்படியாக, தபால் தலை ஒட்டப்படாமலே ஆயிரக்கணக்கான கதைகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுப்  பத்திரிகைகளுக்கும், அஞ்சல் துறைக்கும் பெரும் தலைவலி உண்டாக்கப்படும் என்று எச்சரிக்கிறோம்.

எச்சரிக்கை!
அம்பலவாணரே! அம்பலம் ஏறும் உமது அருகதை, ஜாக்கிரதை!
'அம்பலம்' என்ற ஆறாந்தர பத்திரிகையின் அரைக்கிறுக்கு ஆசிரியர் அம்பலவாணன் 'பிரசுரமாகாத கதை எழுதுவோர் சங்க'த்தைப் பழித்து அரைவேக்காட்டுத்தனமாக எழுதியிருப்பதை அவருடைய அவலட்சணப் பத்திரிகை  வெட்கமின்றித் தாங்கி வெளிவந்திருக்கிறது.

நாம் கஜினி முகமதுவின் கூட்டாளிகளாம். நாம் எழுதுவதை எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்கத் தயாராக இல்லாததால் நாமே ஒரு கையெழுத்துப் பத்திரிகையைத் துவங்கி விட்டோமாம்!.பெரிய உண்மையைக் கண்டு பிடித்து விட்டார் துப்பறியும் நிபுணர்!

உன்னுடைய லட்சணம் என்ன, உன் கதைகள் எத்தனை திரும்பி வந்திருக்கின்றன என்ற புள்ளி விவரம் எல்லாம் எங்களிடம் இருக்கின்றன. அவற்றையெல்லாம் வெளியே விட்டு உன் அருகதையை அம்பலப் படுத்தவா?

நீ எஸ் எஸ் எல் சி தேர்வை எத்தனை முறை எழுதியிருக்கிறாய் என்று நினைவிருக்கிறதா? நீயா கஜினி முகமதைப்  பற்றிப் பேசுவது? அட மாமிசப் பிண்டமே! உனக்கு உடம்பில் சுரணை அற்று விட்டதா?

இன்னொரு முறை உன் திருவாயைத் திறந்தோ அல்லது உன் ஒழுகல் பேனாவிலிருந்து இங்க்கைக் கொட்டியோ ஏதாவது உளறினாயோ, உன் திருவிளையாடல்கள் அம்பலமாகி விடும்! ஆகவே, அற்பப் பதரே, அம்பலவாணா! உன் மரியாதையைக் காப்பற்றிக் கொள்!

செய்திக்குதிர் 
  • 'பிரசுரமாகாத கதை எழுதுவோர் சங்க'த்தின் தலைவராக 'குட்டிச்சாத்தான்' (குமரேசன்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சென்ற வாரம் சென்னையில் நடைபெற்ற  சங்க உறுப்பினர் கூட்டத்தில் நடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 'ஆந்தைக் கண்ணனை' (கண்ணாயிரம்) அவர் 5 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

  • குட்டிச்சாத்தானின் கதைகள் எல்லாப் பத்திரிகைகளாலும் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன என்ற தனிப்பெருமை அவருக்கு உண்டு. சமீபத்தில் அவரது நூறாவது கதை திரும்பி வந்ததற்காக அவருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டு 'நூறு விழுப்புண்கள் ஏந்தியவன்' என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டிருப்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

    தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நிருபர்களிடம் பேசிய குட்டிச்சாத்தான் நமது சங்கத்தை அழிக்கச் சில பிரபல பத்திரிகைகள் சதி செய்கின்றன என்ற திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார்.

    நம் கையெழுத்துப் பத்திரிகையின் வளர்ச்சியினால் தங்கள் விற்பனை பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தினால் பெரிய பத்திரிகைகள் நமது சங்கத்தை அழிக்கும் நோக்கத்துடன் சமீப காலமாக நம் சங்க உறுப்பினர்கள் சிலரின் கதைகளை பிரசுரம் செய்யத் தொடங்கியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.  தன்னுடைய கதையைக் கூடப்  பிரசுரிக்கச் சதி நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இது போன்ற தந்திரங்களால் நம் சங்கத்தை அழித்து விட முடியாது என்று அடித்துப் பேசிய குட்டிச்சாத்தான், தங்கள் கதைகள் பிரசுரிக்கப்படாததால் ஏமாற்றமடைந்த நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் தினமும் நம் சங்கத்தில் சேர்ந்து வருவதாக அறிவித்தார்
    .
  • நமது சங்கத்தின் நெடுநாள் உறுப்பினர்  'முயலவனி'டம் பத்திரிகைகளிலிருந்து  திரும்பி வரும் அவரது கதைகளைச் சுமந்து சுமந்து தனக்குக்  கைவலி ஏற்பட்டு விட்டதாகக்  கூறி அவரை அவமானப்படுத்திய தபால்காரர் மீது கோபம் கொண்டு முயலவன் பேசியதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் தபால்காரரின் முன்பற்கள் இரண்டு உடைந்தன.

    இதற்குப் பழி வாங்கும் விதமாக முயலவனின் முன்பற்களில் இரண்டையாவது உடைக்கப் போவதாகக் கூறிவிட்டு அந்தத் தபால்காரர் சென்று விட்டார்.

    இது நடந்து சில நாட்கள் கழித்து முயலவன் பல்லவன் பேருந்திலிருந்து இறங்கும்போது யாரோ அவரைப் பின்பக்கத்திலிருந்து தள்ளியதில் அவர் தலைகுப்புறத் தரையில் விழுந்தார். அப்போது  அவரது நான்கு பற்கள் உடைந்து விட்டன.

    இது தபால்காரரின் சதிவேலையாக இருக்க வேண்டும் என்பதால் அந்தத் தபால்காரர் உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்டு, இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்று கோரி சென்னை தலைமைத் தபால் அலுவலகத்தின் முன் நம் சங்க உறுப்பினர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். முயலவன் உட்பட நான்கு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் நடந்த அன்று புத்த பூர்ணிமாவுக்காக அந்த அலுவலகத்துக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

  • 'ஊஞ்சல்' பத்திரிகை  நடத்திய நாவல் போட்டியில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகப் புரட்சிப் படைப்பாளர் எஸ் ஜி ராமகிருஷ்ணன் (எஸ் ஜி ஆர்) அறிவித்தார்.

    பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 'கருப்பும் வெள்ளையும்'  என்ற நாவலை எழுதிய 'மேகசஞ்சாரன்' பரிசுத்தொகையில் பாதியை  'ஊஞ்சல்' பத்திரிகையின் ஆசிரியர் 'உலக்கைக் கொழுந்து'க்கு லஞ்சமாகக் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பதாக நாடெங்கும் மக்கள் பேசிக்கொள்வதாகத் தனக்குத் தகவல் வந்திருப்பதால், இந்தப் பரிசு அறிவிப்பு உடனே விலக்கிக்  கொள்ளப்படுவதுடன், உலக்கைக் கொழுந்து தன் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அப்படிச் செய்யாவிட்டால், உலகம் தழுவிய அளவில் ஒரு அமைதியான வன்முறைப் போராட்டம் நடக்கும் என்றும் எஸ் ஜி ஆர் எச்சரித்தார். உண்மையில் தன் கதைக்குத்தான் பரிசு கிடைத்திருக்க வேண்டும் என்று உலக மக்கள் அனைவரும் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். 
திரைமறை  (திரையுலகக் கிசுகிசு)
  • நடிகர் வெல்வெட் குமார் தான் திரையுலகுக்கு வருவதற்கு முன்பு ஒரு சிறுகதை எழுதி அதை ஒரு பிரபல பத்திரிகைக்கு அனுப்பி வைத்திருந்தார். அப்போது அந்தக் கதையை அந்தப் பத்திரிகை பிரசுரிக்கவில்லை. இப்போது அவர் ஒரு பிரபல நடிகர் ஆனதும் அந்தக் கதையைத் தேடி எடுத்து அந்தப் பத்திரிகை  பிரசுரித்திருக்கிறது. தான் எழுதிய ஒரு படு மோசமான கதையைத் தன்  அனுமதியின்றிப்  பிரசுரித்துத் தனக்குப் பெரிய மானக்கேட்டை ஏற்படுத்தி விட்டதாக அவர் அந்தப் பத்திரிகையின் மீது மானநஷ்ட வழக்குப் போடத்  தீர்மானித்திருக்கிறார்.

  • நடிகர் கணேஷ் சந்தர் தான் தயாரித்து நடிக்கும் படத்துக்குத் தானே கதை எழுதப் போகிறார். "இதுவரை சமூகப் பாத்திரங்கள், புராணப் பாத்திரங்கள் என்று எல்லாப் பாத்திரங்களையும் ஏற்று நடித்து விட்டேன். பிரும்மா வேடத்தில் மட்டும்தான் நடிக்கவில்லை, அந்தக் குறையைப் போக்கத்தான் நான் கதாசிரியனாக ஆகத் தீர்மானித்து விட்டேன். பலவகைப் பாத்திரங்களை படைக்கும் கதாசிரியரும் ஒரு பிரும்மாதானே?" என்கிறார் இவர்.

  • நடிகை நாகாஸ்ரீக்குப்  பிடித்தது பால் பாயசம்; பிடிக்காதது பாதாம் கீர். யாராவது அவருக்குப் பால் பாயசம் கொடுத்தால் அவர்கள் மீது ஒரு புன்னகையை வீசுவார். பாதாம் கீர் கொடுத்தால்  அதை அவர்கள் முகத்தில் வீசுவார்!

  • சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழுந்தால் அவர்கள் சீக்கிரம் கிழவர்கள் ஆகி விடுவார்கள் என்கிறார் நடிகை  திலோத்தமா. இவர் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழுவதில்லை!

  • இந்தி நடிகர் அல்டாப் அமிர்தராஜ் பிறந்தபோது அழவே இல்லையாம். குழந்தை இறந்து விட்டது என்று நினைத்து எல்லோரும் வருத்தத்தில் இருந்தபோது திடீரென்று அழுது எல்லோரையும் சிரிக்க வைத்தாராம். இதை இவர் மனைவி சமீபத்தில் ஒரு பார்ட்டியில் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார். இவர்தான் சிரித்தாரே தவிர வேறு யாருக்கும் சிரிப்பு வரவில்லை!

  • நகைச்சுவை நடிகர் ரங்கீஷ்  தனக்கு ஏதாவது நோய் வந்தால் மருந்து சாப்பிடுவதில்லையாம். "நம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் நோய்க்கிருமிகளுடன் போராடி அவற்றைக் கொல்லட்டுமே! நாம் ஏன் ராணுவ உதவி செய்வது போல் அவற்றுக்கு உதவி செய்ய மருந்துகளை உள்ளே அனுப்ப வேண்டும்?" என்கிறார் இவர். இவர் உண்மையாகச் சொல்கிறாரா அல்லது இதை  ஒரு ஜோக் என்று நினைத்துச் சொல்கிறாரா என்று யாருக்கும் புரியவில்லை
எழுத்துப் பித்தனின் புலம்பல்கள்!

உங்கள் கதை பிரசுரமாகாவிட்டால், அது பத்திரிகை அலுவலகத்திலிருந்து திரும்பி வரும். பிரசுரமானால், பத்திரிகை ஆசிரியர் அனுப்பிய செக் பாங்க்கிலிருந்து திரும்பி வரும்.

எழுத்தாளன் காப்பியடித்தால் கேவலம், ஆசிரியர் காப்பியடித்தால் வியாபார தந்திரம்.

மனம்தான் உலகை இயக்கும் சக்தி. பின்னே பாருங்களேன், பத்திரிகையில் தன் பெயர் வெளிவர வேண்டுமென்று பல எழுத்தாளர்களும் எவ்வளவோ பாடுபட்டுச் சாதிக்க முடியாததை, பணம் செலுத்தித் தன் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்பவன் சாதித்து விடுகிறானே!

சிரிப்பாய்ச் சிரித்து...

"என்னப்பா, பேப்பர் விலையெல்லாம் ஏறி விட்டது. நீ இன்னும் பழைய பேப்பரை அதே விலைக்கு எடுத்துக் கொள்கிறாயே!"
"என்ன சார் செய்வது? இரும்பு விலையெல்லாம் ஏறி விட்டதால்,பேப்பரை எடைபோடும் தராசின் விலையும் ஏறி விட்டதே!"

"இது யார்?"
"என் மனைவியின் அக்கா!"
"முன்பு ஒருமுறை அவளை உன் மனைவி என்று சொன்னாயே?"
"ஆமாம், முதலில் அவளைத்தான் கல்யாணம் செய்து கொண்டிருந்தேன்."

"இந்த வாரப் பத்திரிகையில் உங்கள் கதை வெளியாகி இருக்கிறது" என்றாள் மனைவி.
"அப்படியா?"
"அதற்குள் அகமகிழ்ந்து போய் விடாதீர்கள். அது உங்கள் பெயரில் வரவில்லை. பத்திரிகை ஆசிரியர் பெயரில் வெளிவந்திருக்கிறது!"

"கிராமத்தில் வசித்து வந்த அந்த எழுத்தாளர் இறந்த சில மாதங்களுக்கெல்லாம் அந்த கிராமத்தில் இருந்த தபால் நிலையத்தை மூடி விட்டார்கள்."
"ஏன்?"
"தினமும் அவர் தன் கதைகளை பத்திரிகைகளுக்குத் தபாலில் அனுப்புவார், அவையெல்லாம் திரும்பி வரும். அவர் இறந்த பிறகு அந்தத் தபால் நிலையத்துக்கு வேலையே இல்லாமல் போய் விட்டதாம்!"

ஆரம்ப எழுத்தாளர் அண்ணாசாமியின் பொன்மொழிகள்

ஒரு எழுத்தாளராக நீங்கள் பிரபலமாக வேண்டுமானால் நீங்கள் எழுதிய ஒரு கதையாவது பத்திரிகையில் பிரசுரமாக வேண்டும்; நீங்கள் எழுதிய கதை பிரசுரமாக வேண்டுமானால் நீங்கள் பிரபலமானவராக இருக்க வேண்டும்.

கனமான தாளில் கதை எழுதி அனுப்புவது விரும்பத்தக்கதல்ல. தபால்தலை செலவு அதிகமாகும் என்பதுடன், அது பத்திரிகை அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போது, பொங்கல் இனாம் கிடைக்காத தபால்காரருக்குத் தன் கோபத்தை வெளிக்காட்ட ஒரு வலுவான ஆயுதமாகவும் சில சமயம் பயன்படக் கூடும்.

சிலபேர் கதை எழுதிப் பிழைக்கிறார்கள், சிலபேர் கதைகளுக்கு முன்னுரை எழுதிப் பிழைக்கிறார்கள், வேறு சிலர் கதைகளைத் துருப்பி அனுப்பிப் பிழைக்கிறார்கள்.

உலகத்தில் இரண்டு விதமான முட்டாள்கள் உண்டு - கதைகள் எழுதி அவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்புபவர்கள், அவற்றைத் திருப்பி அனுப்புபவர்கள்.

எழுத்தாளன் தன் கதை பிரசுரமாகவில்லையே என்று அழுதானாம், பரசுரகர்த்தர் பத்திரிகை விற்கவில்லையே என்று அழுதாராம்!

ஆசிரியருக்குக் கடிதங்கள்
தாங்கள் ஒருவர்தான் பிரசுரமான கதை, கட்டுரைகளுக்கு வெகுமதியாக ஸ்டாம்ப்களை அனுப்புகிறீர்கள். பிரசிரமாகாத கதை எழுதுவோரின் தேவையை உணர்ந்து செயல்படும் தங்கள் வள்ளாண்மை வாழ்க!
சென்னை                                                                                              சுந்தரமூர்த்தி

சென்ற இதழ்ப் புதிரில் இரண்டு நடிகைகளுக்கும் சேர்ந்து வயது 24 என்று கூறி விட்டு, அதில் ஒருவருக்கு வயது 26 வயது என்று கூறி இருக்கிறீர்கள். அந்த இன்னொரு நடிகை 2 வருடம் கழித்துதான் பிறப்பாரா?
கூவானூர்                                                                                                         ஜெயதாசன்

'எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது' என்ற கதையின் முடிவு பிதற்றல். கதாநாயகனுக்குப் பைத்தியம் என்று கூறி விட்டுக் கதாநாயகியைப் பைத்தியம்மார ஆஸ்பத்திரியில்  சேர்த்ததாக எழுதி இருக்கும் கதாசிரியர் வசிப்பது கீழ்ப்பாக்கத்திலா?
காதாம்பூர்                                                                                                            கண்ணபிரான்

'கைப்பிடி' பத்திரிகைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் பதில் சரியான சூடு. இனியேனும் சூடு பட்ட பூனைக்கு புத்தி வருமா?
ஆமையூர்                                                                                                               நாகமுத்து

சென்ற இதழில் என் பெயரில் ஒரு கடிதம் வெளியாகி இருக்கிறது. அதை நான் எழுதவேயில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆக்ரா                                                                                                                    ஷாஜஹான்

(தவறுக்கு வருந்துகிறோம் - ஆசிரியர்)

புகார்
அன்புடையீர்!
           சென்ற 11.07.73 அன்று 'அடாவடி' பத்திரிகைக்கு 'அஞ்சலகத்தில் பார்த்த அஞ்சு' என்ற சிறுகதையை அனுப்பி வைத்தேன். அது 'அடாவடி' 16.09.73 இதழில் வெளியாயிற்று. ஆனால் அதற்கான சன்மானம் எதுவும் எனக்கு வரவில்லை. ஓசிப் பத்திரிகை கூட வரவில்லை.

            இது பற்றி நான் ஆசிரியருக்கு எழுதியதற்கு, அதன் ஆசிரியர் ':தாண்டவக்கோன்' அவர்களிடமிருந்து கீழ்க்கண்டவாறு பதில் வந்தது. 

            "உங்கள் கதை பிரசுரத்துக்கு ஏற்றதல்ல என்று ஆசிரியர் குழாத்தால்  தீர்மானிக்கப்பட்டது.ஆனால் திருப்பி அனுப்பப்படுவதற்கு பதிலாக, தவறுதலாகப் பரசுரிக்கப்பட்டது. பிரசுரத்துக்கு ஏற்றதல்ல என்று கருதப்பட்டதால், அதற்கு சன்மானம் அளிக்க இயலாது."

        இதன் பேரில்  அவர் முடிவை ஆட்சேபித்து, நான் எழுதியதற்கு பதில் இல்லை. பின்பு எனது பிரதியையாவது திருப்பி அனுப்பும்படி நான் எழுதியதற்கு, "கதை பிரசுரமானதால், கைப்பிரதியைத் திருப்பி அனுப்ப இயலாது' என்று ஆசிரியர் பதில் எழுதி விட்டார்.

        என் கதை பிரசுரமானதற்கு சன்மானமோ, அல்லது கைப்பிரதியோ எனக்குக் கிடைக்க வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

        நன்றியுடன்,
                                                                                                                   தங்கள் அன்புள்ள
                                                                                                                          'அப்பாவி'
                                                                                                                      (அ.பா.விஸ்வநாதன்) 
இந்தப் புகாரை 'அடாவடி' ஆசிரியருக்கு அனுப்பினோம்.  அங்கிருந்து இந்தப் புகார் திரும்பி வந்து விட்டது.

பொதுஜனத்தின் புகாருக்கு மதிப்புக் கொடுத்து அதைத் திருப்பியனுப்பிய 'அடாவடி' ஆசிரியருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   













(1976ஆம் ஆண்டு எழுதப்பட்டது)